ஆன்மிகம்

அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அற்புத முழு சந்திர கிரஹணம்

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் மற்றும் அனைத்து முருகன் திருக்கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா தொடங்கியுள்ள நிலையில் இன்று சந்திரகிரஹணமும் வருகிறது. இதற்கு முன்னர் 60 ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூசமும் சந்திர கிரஹணமும் சேர்ந்து ஒரே நாளில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திர கிரஹணம்
கிரஹணத்தை வானவியல் அடிப்படையில் விளக்க வேண்டுமென்றால், ஒரு வானியல் பொருள், வேறொரு பொருளினால் மறைக்கப்படுவது அல்லது ஒரு பார்வையாளர் பார்க்கும் போது, ஒரு பொருள் நகர்ந்து செல்லும் போது, ஏற்கனவே இருக்கும் பொருளை மறைப்பது போன்று தோன்றும் காட்சியாகும்.

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரனும் கூட 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. இந்தக் காலகதியில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம் என்று சொல்லப்படுகிறது.

சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. 

கிரஹண காலம்

கிரஹண ஆரம்பக் காலம்  மாலை 5:17
கிரஹண உச்சம் இரவு 7:59
கிரஹண மோக்ஷம் அதாவது கிரஹண முடிவுகாலம் இரவு 8:41 
தர்ப்பணம் பண்ண வேண்டிய நேரம் இரவு 8:40 க்கு மேல் 

போஜனமும் ஸ்நானமும்

கிரஹணம் பிடிக்கும் போதும் விட்ட பிறகும் ஸ்நானம் செய்ய வேண்டும். இன்று புதன்கிழமை பகல் போஜனம் செய்யக்கூடாது. அதாவது காலை 11.00  மணிக்குள் உணவு உட்கொள்ள வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், நோயாளிகள் போன்றவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. என்றாலும் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் நோயுற்றவர்களும் கிரஹணம் விட்ட பிறகு ஸ்நானம் செய்ய வேண்டும்.

கிரஹண காலத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டினுள் கிரஹண கதிர்கள் படாத இடத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும். மேலும் கிரஹண காலத்தில் எந்த ஒரு பொருளையும் கர்ப்பிணிப்பெண்கள் கிள்ளக்கூடாது. அவ்வாறு கிள்ளினால் குழந்தை உடல் உறுப்பில் ஏதாவது ஒரு குறை அதாவது பின்னமாக அமைந்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் உணவு பொருட்களில் கிரஹண கதிர்கள் தாக்காவண்ணம் தர்பையை போட்டுவைப்பதும் மரபு.

கிரஹண தோஷம் நீங்க சாந்தி செய்ய வேண்டிய நக்ஷத்திரங்கள்

சாந்தி செய்யக்கூடிய நட்சத்திரகாரர்கள் - புணர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி

அனைவரும் கிரகண நேரத்தில் ஜபம் செய்வது நல்லது. 1000 மடங்கு புண்யத்தை கொடுக்கக் கூடியது. நதி ஸ்நானம், ஸமுத்ரஸ்நானம், தடாகஸ்நானம் என்பன மிகமிக விசேஷம்.

சந்திர கிரஹண பரிஹார ஸ்லோகம்

யோஸௌ: வஜ்ரதரோ தேவ: ஆதித்யானாம் ப்ரபுர்மாத:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ:தாம் தாத்ரோ தேவ: யமோ மஹிஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.
யோஸௌ: சூலதரோ தேவ: பினாகிவ்ருஷவாஹன:
சந்த்ரக்ரஹோ ப்ராகோத்தக்ரஹபீடாம் வயாப்ஹோதது.

ஜோதிடமும் கிரஹணமும்

வானவியலின் அடிப்படையில் தான் ஜோதிடம் அமைந்திருக்கிறது என்றாலும் கிரஹணம் பற்றிய கருத்தில் வானவியலும் ஜோதிடமும் சிறிது மாறுபட்டு நிற்கிறது. 

வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரஹணம் என கூறுகிறது. ஆனால் ஜோதிடத்தில் நிழல் கிரஹணங்களான ராகு மற்றும் கேதுவும் சூரியன் மற்றும் சந்திரனோடு இனைவதை கிரஹணம் என கூறுகிறது.

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில் - சூரியன், சந்திரன், ராகு ஒரே வீட்டில் இருக்கும். சந்திர கிரகணம் ஏற்படும். பௌர்ணமி நாளில் - சந்திரன் - ராகு, சந்திரன்-கேது, சூரியன்-ராகு, சூரியன்-கேது எதிர்எதிர் ராசிகளில் இருக்கும். எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இனைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் எனக் கூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து இன்று ஏற்படும் சந்திர கிரஹணத்தில் அனைத்து வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின்படி சூரியன் கேதுவோடு மகர ராசியிலும் சந்திரன் ராகுவோடு கடகத்திலும் இணைவு பெறுகின்றனர்.

அரசியல் மாற்றம் நிச்சயம்

இன்றைய சந்திர கிரஹணத்தின்போது காலபுருஷனின் நான்காவது ராசி மற்றும் சந்திரனின் ஆட்சி வீடான கடக லக்னத்தில் ஆரம்பித்து சிம்ம லக்னத்தில் முடிவடைகிறது. கடகமும், சிம்மமும் ராஜ கிரகங்கள் எனப்படும் சூரியன் மற்றும் சந்திரனின் ஆட்சி வீடுகளாகும்.

மேலும் சந்திரன் கடகத்திலும் சூரியன் காலபுருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் நிற்கின்றனர். அரசியல் காரக சூரியன், பதவி காரக சந்திரன், கர்ம காரக சனி ஆகிய மூவரும் ஸர்ப கிரஹ இணைவு பெறும்போது அரசியல் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கை பேரிடர்கள் 
மழை மற்றும் நீர் காரகரான சந்திரன், சுக்கிரன் மற்றும் காற்று ராசியான சனி ராகு-கேது தொடர்பு பெற்று நீர் ராசிகளான கடக-விருச்சிக-மீன தொடர்பு கொள்ளும்போது இயற்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்த கூடும் என ப்ரஹத் சம்ஹிதை மற்றும் முண்டேன் அஸ்ட்ராலஜி நூல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது முக்கூட்டு கிரஹங்களான சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் நில ராசியான மகரத்தில் பஹு வர்ஷ நிலை பெற்று சந்திர ராகு தொடர்பு கொள்வது குறிப்பிடத்தக்கது.

காதலர் தினம்

வரும் பிப்ரவரி 14ம் தேதி வேலண்டைன்ஸ்டே எனப்படும் காதலர்கள் தினம் வருவதற்கு முன் கடகத்தில் சந்திரன் ராகுவோடு இணைவு பெற்ற நிலையில் சூரியன் புதன், சுக்கிரன் மற்றும் கேதுவின் இணைவு பெற்று சம சப்தம பார்வை பெற்று சந்திர கிரஹணம் ஏற்படுவது பெண்களின் மீது அவப்பெயர் மற்றும் பெண்கள் ஒழுக்கம் மற்றும் கற்பு நிலை பாதிக்கும் நிலை ஏற்படும். மேலும் பல முறையற்ற திருமணங்கள் நடைபெறும் என்றும் ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.

வெளிநாட்டு வேலைக்கு விசா ரெடி

கடகத்தில் பயண காரகர் சந்திரன் அந்நிய நாடுகளைக் குறிக்கும் ராகுவோடு நீர் ராசியில் கர்மகாரகர் சனி சாரத்தில் இணைவு பெற்று கால புருஷனுக்கு கர்ம ஸ்தானமான மகரத்தில் சூரியன், சுக்கிரன், புதன், கேதுவோடு தொடர்பு கொள்வது பல வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். ஜெனன ஜாதகத்தில் 3,9,10 வீடுகள் தொடர்பு பெற்றவர்கள் தற்போது வெளிநாட்டு வாய்ப்பினை பெறுவார்கள்.

மேலும் ரிஷப லக்னத்தை கொண்ட சுதந்திர இந்தியாவின் ஜாதகப்படி கிரஹண காலத்தில் மூன்றாம் வீடான கடகம், ஒன்பதாம் வீடான மகரம் தொடர்பு ஏற்படுவதால் இந்தியாவிலிருந்து பலர் வெளிநாடுகளில் பணி வாய்ப்பு பெற்று திடீரென வெளிநாடு பயணம் மேற்கொள்வார்கள்.

கூர்ம சக்கரம்

இன்று ஏற்படப் போகும் சந்திர கிரஹணம் பூசம், ஆயில்யம் ஆகிய நக்‌ஷத்திரங்களில் ஏற்படுகின்றது. இந்த நக்‌ஷத்திரங்கள் கூர்ம சக்கரத்தின் படி கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை குறிக்கின்றது.

எனவே இந்தியாவைப் பொருத்தவரை கல்கத்தா, பங்களாதேஷ், ஒரிசா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகள் அரசியல் மாற்றம், நீரினால் இயற்கை உற்பாதங்கள் ஆகியவற்றால் பாதிப்படைய வாய்ப்புள்ள பகுதிகளாகும். 

சாஸ்திர ஆராய்ச்சி

சூரியனோடு சேர்ந்து வித்யாகாரகன் புதன், சாஸ்திரகாரகர் சுக்கிரன் இணைவு பெற்று ராகு கேதுவோடு இணைவு பெறுவது பலருக்கும் வேதம், சாஸ்திரம், ஜோதிடம், மந்திர தந்திரங்கள் ஆகியவற்றில் திடீர் ஆர்வம் ஏற்பட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள். மேலும் மதம் சார்ந்த கிளர்ச்சிகள் உச்சநிலை எட்டும்.

மனஅமைதி தரும் அபிராமி அந்தாதி

மனோகாரகன் சந்திரன் ராகுவோடு இணைந்து கேதுவோடு இணைந்த புத்திகாரக புதனை சம சப்தமமாக பார்ப்பது மனச்சஞ்சலங்களை ஏற்படுத்தும். எனவே கிரஹண காலத்தில் புணர்பூசம், பூசம், ஆயில்யம், விசாகம், அனுசம், கேட்டை, பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நக்‌ஷத்திரக்காரர்கள் அபிராமி அந்தாதியைத் தொடர்ந்து படிப்பது மனஅமைதியை தருவதோடு கிரஹண தோஷ பாதிப்புகளைக் குறைக்கும்.

கோயில்களில் நடையடைப்பு
கிரகணத்தின் போது விரதம் இருப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். கிரகணத்தின்போது கருவுற்ற பெண்களை வெளியே அனுப்பமாட்டார்கள். முக்கியமாக அனைத்து கோவில்களின் நடைகளும் சாத்தப்படுவது வழக்கம்.

கிரகணம் முடிந்த பின்னர் கோவில்களைக் கழுவி சுத்தம் செய்வார்கள். இன்று தை பூசத்தை முன்னிட்டு சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் கோயில் உட்பட பல கோயில்களில் தெப்ப உற்சவம் நடைபெறும். கிரஹணத்தின் காரணமாக கிரணம் முடிந்தபின் நடைபெறும் என கூறுகின்றனர்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT