பரிகாரத் தலங்கள்

நவக்கிரகங்களுக்கும் ஒருமித்த பரிகாரத்தலம் திருமறைக்காடு

இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்தும், திருஞானசம்பந்தர் பதிகம் நான்கும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 10 பதிகங்கள் உள்ளன. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.

என்.எஸ். நாராயணசாமி

காவிரி தென்கரை பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரிசையில் 95-வது தலமாக இத்தலம் விளங்குகிறது.

இறைவன் பெயர்: மறைக்காட்டுநாதர், வேதாரண்யேசுவரர்

இறைவி பெயர்: வேதநாயகி, யாழினும் இனிய மொழியாள்


இத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஐந்தும், திருஞானசம்பந்தர் பதிகம் நான்கும், சுந்தரர் பதிகம் ஒன்றும் என மொத்தம் 10 பதிகங்கள் உள்ளன. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.



எப்படிப் போவது?

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யம் உள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் அகஸ்தியம்பள்ளி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.

ஆலய முகவரி

அருள்மிகு வேதாரண்யேசுவரர் திருக்கோவில்
வேதாரண்யம், வேதாரண்யம் அஞ்சல்,
வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 614 810.


இக்கோயில், தினமும் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

*

தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் என்ற பெருமையை உடைய வேதாரண்யம் என்றும் திருமறைக்காடு என்றும் அறியப்படும் இத்தலம், சப்தவிடங்கத் தலங்களில் இரண்டாவது தலம்.

விடங்கரின் பெயர் புவனி விடங்கர். நடனம் ஹம்சபாத நடனம். இத்தலத்து மூலவர் மறைக்காடுநாதர் ஒரு சுயம்பு லிங்கமாக அருள்புரிந்து வருகிறார். இங்குள்ள தியாகராஜர் மூர்த்தமும் மிகவும் விசேஷமானதாகும். கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. இறைவன், இறைவி ஆகிய இருவர் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இத்தலத்தில் உள்ள இறைவி, யாழினும் இனிய மொழியாள் என்று அழைக்கப்படுகிறாள். இறைவியின் குரல் ஒரு வீணையின் நாதத்தைவிட மதுரமாகவும் இனிமையாகவும் இருப்பதால் அவ்வாறு பெயர் கொண்டுள்ளாள். இதனால்தான், இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தன் கைகளில் வீணை இல்லாமல் தவக்கோலத்தில் கையில் சுவடியுடன் காட்சி அளிக்கிறாள்.

துர்க்கையும் தென்திசை நோக்கி திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளியுள்ளாள். சிறப்பான சக்தி வாய்ந்த பிரார்த்தனைத் தெய்வம். அகஸ்தியம்பள்ளியில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன், திருமறைக்காடு தலத்திலும் காட்டியருளியுள்ளார். அகஸ்தியம்பள்ளியைப் போன்றே திருமறைக்காட்டிலும் கருவறையில் சிவலிங்கத்தின் பின்புறம் சிவன் - பார்வதி கல்யாணக் கோலம் அமைந்திருக்கிறது.


இவ்விடத்தில், ராமன் சமுத்திர ஸ்நானம் செய்து ராவணனைக் கொன்ற பாவம் நீங்கப்பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது. ராமர் பூஜித்த ராமநாதர் சந்நிதியும் இந்த ஆலயத்தில் உள்ளது. ராவணனைக் கொன்றதால் ராமனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை விநாயகர் விரட்டி அடித்ததால், இத்தலத்திலுள்ள விநாயகர், வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி, கோயிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதிக்குக் கொடிமரமும் உள்ளது.


விநாயகர் சந்நிதிக்கு அருகில் மேலக்குமரன் சந்நிதியும் உள்ளது. இத்தலத்தில் உள்ள இந்த முருகப்பெருமான் மேலக்குமரர், அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றவர். இக்கோவிலில் நவக்கிரகங்கள் ஒரே திசையை நோக்கி நேர்க்கோட்டில் காட்சி அளிக்கின்றன. முருகன், துர்க்கை ஆகியோரின் சந்நிதிகளும் கோவிலில் உள்ளன. இத்தலத்தில் பிரம்மா பூஜை செய்து தனது சிருஷ்டித் தொழிலை செய்யலானார். விசுவாமித்திர முனிவர், பிரம்ம ரிஷி ஆக வேண்டும் என்ற தனது ஆவலை சிவபெருமானை இத்தலத்தில் பூஜித்து நிறைவேற்றிக்கொண்டார். அகத்தியர், விசுவாமித்திரர் தவிர, கௌதமர், வசிஷ்டர் ஆகிய முனிவர்களும் இத்தலத்து மறைக்காட்டுநாதரை வழிபட்டுள்ளனர்.


இக்கோவிலில் இரண்டு பிராகாரங்களும், இரண்டு தல விருட்சங்களும் உள்ளன. முதல் பிராகாரத்தில் மணிகர்ணிகை தீர்த்தம், விசுவாமித்திர தீர்த்தம், விக்னேஸ்வர தீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் ஆகியவை உள்ளன. மேலும், திருக்கோடி தீர்த்தமும் உள்ளது. இதிலிருந்துதான், இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நீர் எடுத்து உபயோகிக்கப்படுகிறது. வேதாரண்யம் ஊரில் உள்ள எல்லா கிணற்று நீரும் உப்புக்கரிக்க, ஆலயத்தின் உள்ளே இருக்கும் இக்கிணற்று நீர் மட்டும் நல்ல சுவையுடன் இருப்பது ஒரு அதிசயம்.

கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவேரி போன்ற புண்ணிய நதிகள் மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதீகம். கோவிலின் நேர் எதிரே, கிழக்கே கடல் உள்ளது. இதை வேத தீர்த்தம், சந்நிதி தீர்த்தம் என்று அழைக்கின்றனர். இதில் அதிகாலை நீராடி, பின் ஊருக்குத் தெற்கே உள்ள கோடியக்கரையில் உள்ள ஆதிசேது எனும் கடல் தீர்த்தத்தில் நீராடினால், 100 முறை சேதுவில் நீராடுவதற்குச் சமம்.


ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாட்களில் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்ய சந்நிதிக் கடலில் நீராடி, பின் மணிகர்ணிகையில் நீராடி முன்னோர் வழிபாடு செய்து, மணமக்களாக எழுந்தருளியுள்ள இறைவன் - இறைவியை இவ்வூரில் வழிபடுவது மிகவும் புண்ணியமான ஒன்றாகவும் விசேஷமாகவும் கருதப்படுகிறது. தீர்த்தத்தில் நீராடி தூய்மையான மனத்துடன் இறைவனை வழிபட்டால், முன்வினைப் பாவங்கள், செய்வினைகள் யாவும் அகன்றுவிடும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

தல புராண வரலாறு

ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் ஆகிய நான்கு வேதங்களும் இத்தலத்திலுள்ள ஈசுவரனை பூஜித்த பெருமையை திருமறைக்காடு பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் மனித உருவில் அருகிலுள்ள நாலுவேதபதி என்ற இடத்தில் இருந்து, இத்தலத்து இறைவனை முறைப்படி வழிபட்டு வந்தன. கலியுகம் தொடங்குவதற்கு முன்பு இனிமேல் பூமியில் இருப்பது கடினம் என்று உணர்ந்த வேதங்கள், கோவிலின் முன்கதவுகளை நிரந்தரமாகப் பூட்டிவிட்டு சென்றன. அதுமுதல் பல ஆண்டுகளாக, ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய திட்டிவாசல் வழியாகவே கோவிலுக்குள் சென்று வந்தனர்.



ஒருமுறை, திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் திருமறைக்காட்டுக்கு வருகைபுரிந்தனர். ஊர் மக்கள் யாவரும் சிறிய திட்டிவாசல் வழியாக கோவிலின் உள்ளே செல்வதையும், கோவிலின் முன்கதவுகள் மூடி இருப்பதையும் பார்த்து விவரம் கேட்டனர். வேதங்கள் பூஜித்து மூடிவிட்டுப் போயிருந்த கதவுகளைப் பதிகம் பாடி திருநாவுக்கரசர் திறக்கவும், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி கதவை மூடவும் செய்த அற்புதம் நிகழ்ந்த தலம் திருமறைக்காடு. அப்பரும் சம்பந்தரும் பதிகம் பாடி மூடிய கதவை திறக்கவும் மூடவும் செய்த நிகழ்ச்சி, இத்தலத்தில் பிரம்மோத்சவ விழாவாக மாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில்தான், திருஞானசம்பந்தர் கோளறு திருப்பதிகம் பாடி அருளினார்.

சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டு வந்த அரசன் நெடுமாறன், சைவ சமயத்தை விட்டு விலகி சமண மதத்தில் சேர்ந்து வாழ்ந்து வந்தான். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்று பாண்டிய நாட்டு மக்களும் சமண மதத்தை சார்ந்து வாழ்ந்து வந்தனர். அவன் மனைவி மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். மன்னர் சமண மதத்தை ஆதரித்து சைவத்தை புறக்கணிப்பது குறித்து கவலைப்பட்ட அரசி, அமைச்சருடன் கலந்து ஆலோசித்தார்.



சம்பந்தரைப் பற்றி விவரம் அறிந்திருந்த அமைச்சர், அரசியிடம் அவர் பற்றி எடுத்துச் சொல்ல, திருமறைக்காட்டில் தங்கியிருந்த சம்பந்தருக்குப் பாண்டிய நாட்டு அரசி மங்கையர்க்கரசி, பாண்டிய நாடு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மதுரை செல்வதற்கு முன் திருமறைக்காட்டில் தங்கியிருந்த திருநாவுக்கரசரிடம் சொல்லிவிட்டுப்போக சம்பந்தர் வந்தார். சமணர்களால் மிகுந்த தொல்லைகளுக்கு ஆளாகியிருந்த அப்பர் பெருமான், சம்பந்தரிடம் மதுரையில் உள்ள சமணர்கள் கொடுந்தொழில் செய்பவர்களென்றும், தற்போது நாளும் கோளும் நன்றாக இல்லையென்றும் சொல்லி அவரை மதுரை செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறினார்.

அதற்கு சம்பந்தர், சிவபெருமானை வழிபடும் அடியார்களுக்கு நாளும் கோளும் நன்மையே செய்யும், இடர் செய்யாது என்று கூறி,

1.
வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆக அறும் நல்லநல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

3.
உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலை அது ஊர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும்
அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

4.
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறை ஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

5.
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

6.
வாள்வரி அதன் ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
கோற் அரி உழுவையோடு கொலை யானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

7.
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடையேறு செல்வன் அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

8.
வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த
மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

9.
பலபல வேடமாகும் பரன் நாரிபாகன்
பசு ஏறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வருவகாலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

10.
கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில்ல் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

11.
தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.

என்ற திருப்பதிகத்தை அருளினார். இப்பதிகம் கோளறு பதிகம் என்று அறயப்படுகிறது.

இப்பதிகத்தை நாள்தோறும் பக்தி சிரத்தையுடன் ஓதி வந்தால் நாள்கள், கோள்கள் இவற்றால் வரும் துன்பங்களில் இருந்து விடுபடலாம். மேலும், இப்பதிகத்தை ஓதுவதால் யம பயம் நீங்கும். துஷ்ட விலங்குளால் ஏற்படும் ஆபத்துகள், விலகும், கொடிய நோய்கள் தீரும். யாத்திரை மேற்கொள்பவர்கள் இடையூறு ஏதுமில்லாமல் தங்கள் பயணத்தை முடிப்பார்கள். எல்லாவிதத் துன்பங்களும் நீங்கி இன்பமாக வாழ்வர் என்பது அருந்தவச் சீலர்கள் அனுபவத்தால் கண்டு உணர்ந்துள்ளனர்.

இனி வரும் வாரங்களில், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களிலிருந்து விடுபடச் செல்ல வேண்டிய நவக்கிரக பரிகாரத் தலங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இத்தலம் பற்றி திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகத்தைப் பாடியவர்கள் கரூர் சுவாமிநாதன் மற்றும் மதுரை பொன். முத்துக்குமரன்

<br /> </p><p align="JUSTIFY"><strong>Picture courtesy : www.shivatemples.com</strong></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT