பரிகாரத் தலங்கள்

தம்பதி ஒற்றுமைக்கு வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயில்

கு. வைத்திலிங்கம்

தம்பதி ஒற்றுமை,  மாங்கல்ய பலம், திருமணத் தடை நீக்குதல், ஐஸ்வர்ய யோகம் போன்றவை அளிக்கக் கூடிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வெள்ளூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை திருக்காமேசுவரர் திருக்கோயில்.

திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறிக்கு அருகில் அமைந்துள்ள இக்கோயில், பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. வேறெங்கும் காணாத வகையில், வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோயிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி காட்சியளிப்பது, சிவபெருமானை வழிபட்டுப் போகத்துக்கு சுக்ரன் அதிபதியானது இக்கோயிலில்தான். ராவணனுக்கு உடல் வலிமை கொடுத்து, ஈஸ்வர பட்டத்தைச் சூட்டியது இக்கோயில் இறைவன்தான். மேலும் குபேரன் திருக்காமேசுவரரை வழிபட்டுதான் தனாதிபதியாக மாறினார் என்ற சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு. 

திருக்கோயில் கோபுரம்

வெள்ளூர் பெயர்க் காரணம்

முசுகுந்தனுக்கு சக்கரவர்த்தி பதவியையும் வாளாசுரனை வெல்லக்கூடிய ஆயுதங்களையும் கொடுத்து, வெற்றியைக் கொடுத்தது இத்திருக்கோயில்தான். அதனால்தான் இவ்வூர் வெள்ளூர் எனப் பெயர் பெற்றது. மேலும் காலபைரவரை வழிபட்டு வாளாசுரனை வென்றதாக வரலாறு. வாளாசுரனை அழிக்க முற்பட்ட முசுகுந்தனுக்கு வெற்றியை அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் இக்கோயிலின் கிழக்கு நுழைவுவாயில் அருகில் தரிசிக்கலாம்.

வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயில் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் விஜயாதித்த சோழனால் புனரமைக்கப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது என்று திருக்கோயிலின் கல்வெட்டு கூறுகிறது.

தல வரலாறு

சிவபெருமானைவிட (ஈசன்) தானே உயர்ந்தவன் என்ற செருக்கு கொண்டு, பிரம்மாண்ட யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மாப்பிள்ளையான சிவபெருமானுக்கு யாகத்தில் கலந்துகொள்ள அழைப்பில்லை. ஆனாலும் தனது தந்தை நடத்தும் யாகத்தில் அழைப்பில்லாமல் சென்ற மகள் தாட்சாயினி (பராசக்தி), அங்கு போய் அவமானப்பட்டுத் திரும்பி வந்தாள். கூடவே தந்தைக்கு சாபமும் கொடுத்துவிட்டு வந்தாள்.

கோயிலின் கொடிமரம்

தன் அனுமதியில்லாமல் சென்றதால், அவரை நெற்றிக்கண்ணால் சுட்டெரித்தார் சிவபெருமான். தன் தவறை உணர்ந்த பராசக்தி, மீண்டும் சிவபெருமானுடன் இணைந்து கயிலையில் வசிக்க விரும்பினாள்.  அப்போது, பூலோகத்தில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து, என்னை வழிபடு, உரிய நேரம் வரும்போது உன் விருப்பம் நிறைவேறும் என்று அருளினார் சிவபெருமான். அதன்படி பர்வதராஜனின் மகளாக அவதரித்த அன்னை, பார்வதி திருநாமம் பூண்டு பர்வதமலையில் தவம் புரியத் தொடங்கினார். 

பார்வதியைப் பிரிந்த சிவபெருமான் கயிலையில் அசைவற்ற நிலையில் இருந்தார். இதனால் பிரபஞ்சத்தில் ஓரணுவும் அசையவில்லை. இதே நிலை தொடர்ந்தால் உலகமே அழிந்துவிடும் என அஞ்சிய பிரம்மாவும், விஷ்ணுவும் தேவர்கள் சூழ சிவபெருமானையும், பார்வதியையும் ஒன்றிணைக்க முயன்றனர். மன்மதனை அழைத்து சிவபெருமான் மீது காமபாணத்தை ஏவுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் சிவபெருமான் மீது பாணம் தொடுக்க மன்மதன் தயங்கினான்.  உடனே தேவர்கள் "நீ ஈசன் மீது காமபாணம் தொடுக்காவிட்டால், உனக்கு நாங்கள் சாபம் அளிப்போம்'' என்று மிரட்டினர். இதனால் பயந்துபோன மன்மதன், ஒரு புன்னைமர நிழலில் ஒளிந்து கொண்டு ஈசன் மீது அம்புவிட்டான்.

மகா கணபதி

அவன் விட்ட அம்பு, வில்லிலிருந்து வெளியேறும் முன்பாகவே, அவனை தன்னுடைய நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்தார் சிவபெருமான்.  அதோடு மன்மதன் விட்ட பாணமும் திசைமாறி, பார்வதியின் மீது பட்டது. பார்வதியின் தவம் கலைந்தது. தன் அவதார நோக்கம் உணரப் பெற்றார் அவர். சிவபெருமானை அடைவதற்கான காமபாணம் தன் மேல் விழுந்ததால், பார்வதி சிவகாமசுந்தரியாகி, ஈசனுடன் கூடினாள். அதனால்தான் இறைவிக்கு சிவகாமசுந்தரி எனப் பெயர் ஏற்பட்டது. இந்த பெயர் கொண்டவரே இத்திருக்கோயில் இறைவியாகத் திகழ்கிறார். இறைவனின் திருநாமமும் அதனாலேயே காமேசுவரர் என்றானது.

மன்மதனுக்கு மீண்டும் உடல் அளித்த தலம் 

மன்மதனின் இழப்பை அவள் மனைவியான ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவரைத்  திரும்ப வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டாள். அதேவேளையில் மன்மதன் இல்லாததால், ஜீவராசிகளிடம் காதல் உணர்வு பெருகவில்லை. உயிர்ப் பெருக்கமும் நிகழவில்லை. எனவே மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து, 

ஈசனை  வணங்கும் கோலத்தில் அமைந்துள்ள மன்மதன், ரதி சிற்பம்

ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான். அதனுடன் மன்மத மதனகளிப்பு மருந்து என்னும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார் சிவபெருமான். அதனாலேயே திருக்காமேசுவரருக்கு வைத்தியநாதர் என்ற திருநாமமும் உண்டு. 

தலப் பெருமை 

திருப்பாற்கடல் கடைந்த நிகழ்வின்போது அமுதம் பெறுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போட்டி வந்தது. அசுரர்களுக்கு அமுதம் போகாமல் இருப்பதற்காக, திருமால் மோகினி வடிவெடுத்து, தேவர்களுக்கு மட்டுமே அமுதத்தை வழங்கினார். அந்தவேளையில் மோகினியைப் பார்த்து சிவபெருமானே மோகித்ததால் ஐயப்பன் அவதரித்தார்.

வள்ளி-தெய்வசேனா சமேதராய் சுப்பிரமணியர்

இந்நிகழ்வை அறிந்த மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி கோபம் கொண்டு, வைகுந்தத்தைவிட்டே வெளியேறினாள். தன் கோபத்துக்கு காரணமான சிவபெருமானிடம் நியாயம் கேட்பதற்காக அவரை அழைத்தாள். ஆனால் ஈசன் அங்கு வராததால், பூலோகத்துக்கு வந்து வில்வாரண்ய சேத்திரம் எனப்படும் வெள்ளூருக்கு வந்து, ஈசனைக் குறித்து தவம் செய்தாள். அப்போதும் இறைவன் அவளுக்குக் காட்சி தரவில்லை. எனவே தன்னையே ஒரு வில்வமரமாக மாற்றிக் கொண்டு, வில்வ மழையாகப் பொழிந்து சிவபெருமானை பூஜை செய்தாள். அதன் பின்னர் சிவபெருமான் மகாலட்சுமி முன்பு தோன்றி, ஐயப்பனின் அவதார நோக்கத்தை எடுத்துக் கூறி கோபத்தைத் தணித்து சாந்தப்படுத்தினார். மேலும் மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை சேர்த்து வைத்தார். வில்வமரமாகத் தோன்றி தன்னை அர்ச்சித்த காரணத்தால், ஸ்ரீவத்ச முத்திரைப் பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கு அதிபதியாக்கினார்.

சிறப்பு வாய்ந்த ஐஸ்வர்ய மகாலட்சுமி

வேறெங்கும் காண இயலாத வகையில், தட்சிண பாகம் என்று கூறப்படும் வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் வில்வமரத்தையும், அதன் நிழலில் ஐஸ்வர்ய மகுடம் தரித்த மகாலட்சுமியையும்  இக்கோயிலில் தரிசிக்கலாம்.

  ஐஸ்வர்ய மகாலட்சுமி

அபய, வரதம் கூடிய திருக்கரங்களோடு, மேலிரு கரங்கள் தாமரை மலர்கொண்டு காட்சி தருகிறார் ஐஸ்வர்ய மகாலட்சுமி. இங்கு லட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வமரத்துக்கு முதலில் பூஜை செய்கின்றனர்.

இறைவன் திருக்காமேசுவரர்

இத்திருக்கோயில் இறைவன் திருக்காமேசுவரர் என்றழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கும் இக்கோயில் இறைவனுக்கு வில்வாரண்யேசுவரர், ஐஸ்வர்யேசுவரர், லட்சுமிபுரீசுவரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்ற திருநாமங்களும் உண்டு. மன்மதன், ரதி, திருமகள், போகர், முசுகுந்த தேவேந்திரன் வழிபட்ட பெருமைக்குரியவர்.

திருக்காமேசுவரர் கருவறை சன்னதி கோபுரம்

சித்தர்களுக்கே எங்கு சென்றாலும் சித்திக்காத காரியம், திருக்காமேசுவரர் சன்னதியில் சித்தியாகும் என்பதால், மனிதர்கள் நினைக்கும் காரியங்கள் சித்தியாக திருக்காமேசுவரர் சன்னதியில் தவம் செய்வது சிறப்புக்குரியது எனக் கூறப்படுகிறது.

தன் மீது கோபம் கொண்ட மகாலட்சுமியைச் சாந்தப்படுத்தி, மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தது, ரதிதேவியின் வேண்டுதலை நிறைவேற்றி மன்தமனுக்கு உடல் வழங்கிய இறைவன் போன்ற பல்வேறு சிறப்புகளை அருள்மிகு  சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை திருக்காமேசுவரர் கொண்டிருக்கிறார். எனவே, கணவன்- மனைவி ஒற்றுமை, மாங்கல்ய பலம், ஐஸ்வர்ய யோகம் கிடைக்க இத்திருக்கோயில் இறைவனைப் பிரார்த்தனை செய்து, பலன் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

போகர்

மன்மதனுக்கு இழந்த உடலை  அளித்தல், மகாலட்சுமிக்கு ஐஸ்வர்ய மகுடத்தை அளித்தல், முசுகுந்த சக்கரவர்த்திக்கு வாளாசுரனை வெல்லக்கூடிய ஆற்றலை அளித்தல், போகர் உள்ளிட்ட பலகோடி சித்த மகான்களுக்கு அஷ்டமாசித்தி அளித்த திருக்கோயில் என்பதால், இன்றளவும் ஆண்கள் சட்டை, பனியன் போன்ற மேலாடைகளின்றி இறைவன் திருக்காமேசுவரைத் தரிசனம் செய்வது தொன்று தொட்டுத் தொடரும் வழக்கமாக உள்ளது.

திருக்காமேசுவரப் பெருமானின் பார்வை நமது சரீரத்தில் பட வேண்டும். அவ்வாறு படும்போது எவ்வளவு மனக் கஷ்டங்கள், நமது முயற்சிக்கான தடைகள் இருந்தால் அவை அனைத்தும் விலகி, எண்ணங்கள் சரியாகி விரைவில் கைகூடும் என்பது அனுபவபூர்வமான நிகழ்வாகும்.

நந்திகேசுவரர்

இறைவி சிவகாமசுந்தரி

தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் அம்மனாக சிவகாமசுந்தரி அம்மன் தெற்கு நோக்கிய எழுந்தருளி, காட்சியளித்து வருகிறார். தன் மீது விழுந்த காமபாணத்தால் சிவபெருமானுடன் கூடியதால், பார்வதி தேவிக்கு சிவகாமசுந்தரி எனப் பெயர் வந்தது இக்கோயிலில்தான்.

சிவகாமசுந்தரி அம்மன் கருவறை சன்னதி விமானம்

தம்பதி ஒற்றுமை, மாங்கல்ய பலம் அளிக்கும் பரிகாரத் தலத்தின் இறைவியாக சிவகாமசுந்தரி திகழ்வதால், பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை இத்திருக்கோயில் இறைவி நிறைவேற்றித் தருவதாகக் கருதி, அவரை மனமுருக வழிபட்டுச் செல்கின்றனர்.

தவம் செய்தால் சித்தி கிடைக்கும் பூமி 

போகர் ஏழாயிரம் என்ற நூலில், சித்தர்கள் அனைவரும்  எங்கு சென்று தவம் செய்தாலும் சித்திக்காத காரியம், திருக்காமேசுவரர் சன்னதியில் அமர்ந்து தவம் செய்தால் சித்தியாகும் என்பதால் போகர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி ஆகியோர் தலைமையில் கோயிலைச் சூழ்ந்து சித்தர்கள் குழுமமே தவம் செய்வதாகவும், வெள்ளூர் திருக்காமேசுவரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தைப் பிரதிஷ்டை செய்த பின்னரே, பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றும் திருக்காமேசுவரர் திருக்கோயிலிலின் மகா மண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தைத் தரிசனம் செய்யலாம். திருக்கோயிலின் ஈசான பாகத்தில் அமைந்துள்ள சுரங்கத்தில் கம்பீரமாக போகர் காட்சி தருகிறார். அரூபமாக இன்னும் எண்ணற்ற பல சித்தர்கள் தவம் செய்வதாக அகஸ்தியர் நாடியிலும், வசிஷ்ட நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் காணப்படுவது சிறப்புக்குரியது.

நர்த்தன கணபதி

ஞான பைரவர்

மன்மதன் திருக்காமேசுவரப் பெருமானிடம் காமபாணத்தைப் பெற்று, அதை உயிரினங்கள் மேல் எவ்வாறு செயல்படுத்துவது என்ற விகிதாசாரம் தெரியாமல் திகைத்தார். உடனடியாக பைரவரை தியானித்து, அவரது பாதங்களில் காமபாணத்தினால் மலர்மாரி பொழிந்து வழிபட்டார். பைரவர் மகிழ்ந்து ஆவுடையார் மேல் நின்று ஞான பைரவராகக் காட்சி தந்து, காமபாணத்தை எந்தெந்த உயிர்களுக்கு எந்தெந்த  விகிதத்தில் செயல்படுத்த வேண்டுமென்ற ஞானத்தை மன்மதனுக்கு கொடுத்தார்.

ஸ்ரீ ஞான பைரவர், ஸ்ரீ கால பைரவர்

அதனால் இத்திருக்கோயிலில் காணப்படும் பைரவர் ஞானபைரவாகக் காட்சியளித்து வருகிறார். எனவே கல்வியில் சிறந்து விளங்க நினைக்கும் மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரை ராகுகால நேரத்தில்  செவ்வரளி மாலை அணிவித்து ஞானபைரவரை வழிபட்டால் ஞான அபிவிருத்தி கிட்டும்.

கஜலட்சுமி

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

பரிகார சிறப்பு 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட தனது கணவர் மன்மதனுக்கான மனைவி ரதிதேவி முறையிட்டு, மீண்டும் அவனது உடலைப் பெற்ற திருக்கோயில் என்பதால் இத்திருக்கோயில் தம்பதியினர் ஒற்றுமைக்கான தலமாகத் திகழ்கிறது. மேலும் பெண்களின் மாங்கல்ய பலம் அளித்தல், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்தல், ஐஸ்வர்ய யோகம் கிடைத்தல் போன்ற பல்வேறு பரிகாரங்களுக்குரிய சிறப்புத் திருக்கோயிலாக வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் விளங்குகிறது.

சண்டிகேசுவரர்

நேர்த்திக் கடன்

போகத்துக்கு அதிபதியான சுக்கிரன், ஜாதகத்தில் சரியில்லை என்றால், எவ்வளவு பெரிய கோடீசுவரராக இருந்தாலும் காரியத் தடை, மனக் குழப்பம், பொருளாதார வீழ்ச்சி, திருமணத் தடை, குழந்தையின்மை, வியாபார வீழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்துவார். எனவே சுக்கிர தோஷம் நீங்க, சுக்கிரனுக்கு அதிபதியான மகாலட்சுமியை சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையான விடியற்காலை 6 மணி முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வந்தால் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் ஐஸ்வர்யம் பெருக வழிபடலாம். குழந்தை பாக்கியத்துக்கும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும், அமாவாசையன்று இறைவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து, இறைவன் திருக்காமேசுவரர், இறைவி சிவகாமசுந்தரி ஆகிய இருவரையும் வலம் வந்தால், பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம்.

விஷ்ணு துர்க்கை

தோஷம் நீங்க

தங்கம், வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வணங்குவதற்கு ஏற்ற திருக்கோயில் இது. தங்கம், வெள்ளி நகைகளைச் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அத்தோஷங்களை அகற்றுவதற்கு இத்திருக்கோயில் வந்து வழிபடுவது சிறப்பு. 

தட்சிணாமூர்த்தி

பிற சன்னதிகள் 

இக்கோயிலுக்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என இரு நுழைவுவாயில்கள் உள்ளன. கிழக்கு வாசல் வழியாக வந்தால் பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோயிலின் பிரகாரம் திருமாளிகைப் பத்தியுடன் உள்ளது. சிவாலயத்தின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. கோயிலின்  பிரகாரத்தின் தென் மேற்கில் போஷகணபதி சன்னதி, மேற்கில் வள்ளி-தேவசேனா உடனுறை சண்முகர் சன்னதி, சண்டிகேசுவரர், நவக்கிரக நாயகர்களின் சன்னதி போன்றவை அமைந்துள்ளன. தலபுராணத்தை எடுத்துரைக்கும் முகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும்  மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது.

தென் மேற்கிலுள்ள போஷ கணபதி சன்னதி

தல விருட்சம் 

வெள்ளூர் திருக்காமேசுவரர் திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. அந்த வில்வமரத்தின் நிழலில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி எழுந்தருளியிருப்பது அதிலும் சிறப்பானதாகும். மேலும் இக்கோயில் தீர்த்தத்துக்கு ஐஸ்வர்ய தீர்த்தம் என்றும் பெயர்.

தலவிருட்சமான வில்வமரம்

எப்படிச் செல்வது?

திருச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறிக்கு அருகில் உள்ளது. திருச்சியிலிருந்து சுமார் 32 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்தும், டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1 டோல்கேட், நொச்சியம், திருவாசி, துடையூர், சிறுகாம்பூர், கிளியநல்லூர், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், அய்யம்பாளையம்  வழியாக வெள்ளூர் கோயிலை வந்தடையலாம்.

சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பெரம்பலூர், சிறுகனூர், சமயபுரம், நெ.1. டோல்கேட், நொச்சியம், திருவாசி, துடையூர் வழியாக மேற்கண்ட வழித்தடத்திலேயே வந்து கோயிலைச் சென்றடையலாம்.

கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் குளித்தலை வந்து அங்கிருந்து முசிறி வழியாகவும், நாமக்கல், சேலம், தருமபுரி போன்ற மாவட்டங்களில் வருபவர்கள் முசிறி வழியாகவும் வந்து கோயிலுக்கு வந்தடையலாம்.

 பிரம்மா

நடை திறப்பு

வெள்ளூர் திருக்காமேசுவரர் கோயில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தொடர்புக்கு: இக்கோயிலுக்கு வருபவர்கள் எஸ். முரளி என்கிற சிவநாராயண குருக்களை 98436 06044 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 நவக்கிரக நாயகர்கள் சன்னதி

தொடர்பு முகவரி

அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் உடனுறை திருக்காமேசுவரர் கோயில்
வெள்ளூர்,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம் - 621202.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT