கட்டுரைகள்

அரசாங்க பதவி வேண்டுமா? அரசியலில் உயர் பதவி வேண்டுமா? சனி மஹா பிரதோஷத்தில் நந்தி தரிசனம் செய்யுங்க!


இன்று சனிக்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் போன்ற அனைத்து சிவாலயங்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற இருக்கிறது. 

பொதுவாக ஜாதகத்தில் ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.  உலகை காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் ப்ரார்த்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு, ரிஷிகள், முனிவர்கள், மனிதர்கள் மற்றும் சகல ஜீவ ராசிகள் அனைவரும்  பிரதோஷ தினத்தில் சிவனை வணங்குகின்றனர்.  அதே நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது  ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இலை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.  இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.

 சனி மஹா பிரதோஷம்:
சனிக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்து அமைந்துள்ளதால் இது சனி மஹா பிரதோஷம் என சிறப்பாக கூறப்படுகிறது.  ஒருவர் ஜாதகத்தில் எந்த கிரஹத்தின் தசா புத்தி நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோயிலுக்குச் சென்று சிவனாரை, தென்னாடுடைய சிவனை வழிபடுவது  அனைத்து கிரஹ தோஷங்களையும் போக்கும் சிறப்பு மிக்கதாகும். எனவேதான் இதனை சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.  

ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி மற்றும் சனி தசை, புத்தி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும். சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும் என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம். எனவே இந்த  நாளில் சிவ தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.   

அதிகார நந்தியும் பிரதோஷ நந்தியும்:

சிவன் கோயில்களில் பிரம்மோத்ஸவத்தின்  போது அதிகார நந்தி வாகனத்தில்  மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பது மரபு. அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது. 

வருடத்தில் ஒருமுறை வரும் அதிகார நந்தியை தரிசிக்க இயலாதவர்கள் மாதாந்திர பிரதோஷத்தில் நந்தியின் மேல் வலம் வரும் சிவனை வழிபட அதிகார நந்தியை தரிசித்த அதே பலன் கிடைக்கும் என ஆகம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

செவ்வாய் கிழமையில் வரும்  பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. வேறு விதமாக கூறினால் தோஷங்களை குறிக்கும் எனலாம். பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத, பித்ரு, ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி, பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பது மேற்கூறிய அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். கிடைத்தற்கரிய நாள் இது.

சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்ணுவிற்கும் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரன்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.

இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம். எனவே துயரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்கள் சிவனையும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம். மேலும் துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும். பிரதோஷ காலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவனையும் விஷ்ணுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இலவசமாகவே கிடைத்திடும்.

ஜோதிடமும் அதிகார பதவியும்:

கிரகங்களில் அதிகாரத்தையும் கம்பீரத்தையும் குறிக்கும் கிரகம் என்றால் அது செவ்வாய்தான். சூரியனும் அதிகாரத்தை குறிக்கும் கிரகம்தான் என்றாலும் சூரியன் அரவணைத்து செல்லும் அதிகாரமும் ஆன்மீகத்தோடு சேர்ந்த கம்பீரமும் கொண்டது என்பதால் இரண்டிற்கும் கால தேச வர்தமானம் மாறுபடும். வீரமும் துணிச்சலும் கட்டுக்கடங்காத தன்மையும் கொண்ட கிரகம் செவ்வாயாகும்.

சூரியனும் செவ்வாயும் ஆண்மையை குறிக்கும் கிரகங்கள் என்றாலும் ஒரு பெண்ணுக்கு தந்தையை குறிக்கும்போது அரவணைத்து செல்லும் சூரியனும் கணவனையும் இளைய சகோதரனையும் குறிக்கும்போது செவ்வாயும் காரகமாகின்றன.

பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம், வீரதீர  செயல்கள்,  அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற பல தன்மைகள்  கொண்ட கிரகம்.  போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட்  போன்றவற்றுக்கான அதிபதி  செவ்வாய் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அரசாங்க உயர் பதவிக்கு அனுகிரகம் செய்வதும் செவ்வாய்தான். தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு,  குரலில்  அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. செவ்வாய் அதிகாரத்தையும் பதவியும் குறிப்பதால்தான் அவர் காலபுருஷனுக்கு பத்தாமிடமான  மகரத்தில் உச்சம் பெறுகிறார். ஜோதிடத்தில் சூரியன், செவ்வாய் சனிசேர்க்கை இருந்தால் தான் அதிகாரம் தரும் பதவிகளை அடைய முடியும். 

 அங்காரகனுக்கும் பிரதோஷ நந்திக்கும் உள்ள தொடர்பு:
சிவனின் காவலனாக விளங்கும் நந்தியம்பெருமானும் அதிகாரம் பதவி ஆகியவற்றை கொடுப்பதில் செவ்வாயை போன்றே விளங்குகின்றார். அதிகாரம் பதவி மட்டுமின்றி திருமண யோகத்திற்கும் நந்தியம்பெருமான் முக்கியத்துவம் பெறுகிறார். இன்னும் சொல்லப்போனால் செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கு நந்திவழிபாடே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்தில் நந்தி வழிபாடு செய்வது செவ்வாயின் காரகங்களான திருமணயோகம், கடன் நிவருத்தி, ஆற்றல், வெற்றி, உயர்பதவி ஆகியவை ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

 அரசு வேலை கிடைக்க பிரதோஷ நந்தி தரிசனம்:

ஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துறை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் இந்த சனி மஹா பிரதோஷ நன்னாளில் நந்தியம்பெருமானையும் சிவனையும் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.

அரசியலில் அதிகார பதவியை தரும் பிரதோஷ நந்தி:


ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியலில் கொடிகட்டி பறக்க விரும்புபவர்கள், பதவியில் ஸ்திரத்தன்மை வேண்டுபவர்கள் சனி மஹா பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்கிவர விரும்பியது அனைத்தும் நிறைவேறும் என்பது நிதர்சனம்.

யாருக்கெல்லம் சனி மஹா பிரதோஷம் சிறப்பு தரும்? 

1. ஜென்ம ராசி மற்றும் லக்னத்தில் சனீஸ்வரர் பயணம் செய்யும்  தனுர் ராசி மற்றும் லக்ன காரர்கள். அவர்களுக்கு மிதுனம் ஏழாம் வீடாக வந்து அதனை தனது சம சப்தம பார்வையால் பார்க்கிறார்

2. மிதுன ராசி லக்ன காரர்களுக்கு களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீடான தனுசு ராசியில் பயணம் செய்து தனது சம சப்தம பார்வையால் மிதுனத்தை பார்ப்பது.

3. சனீஸ்வர பகவான் தனது 3-7-10 பார்வையாலும் தனது திரிகோண பார்வையாலும் கும்பம், மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிகளை பார்க்கிறார்,  ”குரு இருக்கும் இடம் பாழ் - சனி பார்க்கும் இடம் பாழ்”  என்பது சொல்வழக்கு. எனவே மேஷ, மிதுன, சிம்ம கன்னி, தனுசு, கும்ப ராசிகளை இரண்டாம் வீடுகளாக (குடும்ப ஸ்தானமாக) கொண்ட மீனம், ரிஷபம், கடகம், துலாம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகள்/லக்ன காரர்கள் குடும்ப வாழ்க்கை சிறக்க சனி பிரதோஷ தரிசனம் செய்வது நல்லது.

 4. கணவன்/மனைவியை குறிக்குமிடமாக களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் வீட்டை குறிப்பிடுவார்கள்.  எனவே மேஷ, மிதுன, சிம்ம, கன்னி, தனுசு, கும்ப ராசிகளை ஏழாம் வீடுகளாக கொண்ட துலாம், தனுசு, கும்பம், மீனம், மிதுனம், சிம்மம் ராசி/லக்ன காரர்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க இந்த சனி மஹா பிரதோஷத்தில் ரிஷபாரூடரை வணங்குவது நல்லது.

5. நீங்கள் நினைப்பது புரிகிறது. 12 ராசிகளையும் கூறிவிட்டீர்கள். எதைதான் விடுவது என்பதுதானே?  பன்னிரெண்டு ராசி/லக்ன காரர்களுக்கும் குடும்பம் இருக்கிறது தானே?  எனவே 12 ராசி லக்ன காரர்களும் இந்த சனி மஹா பிரதோஷத்தில் வணங்குவது தான் சிறப்பு. ஒரு ராசியில் நின்று 12 ராசிகளையும் கட்டுபடுத்துகிறார் அல்லவா? அதனால் தான் சனீஸ்வர பகவானை நீதிமான் என போற்றுகிறோம்.

உங்களுக்கு வேலையில் பிரச்சனையா? உங்கள் தகுதிகேற்ப அதிகாரம் இல்லையா? உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கவில்லையா? அப்படியென்றால் நீங்கள் திருமயிலை கபாலீஸ்வரர் மற்றும் அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று சனி பிரதோஷ காலத்தில் பிரதோஷ நந்தியை தரிசித்து ப்ரார்த்தனை செய்துக்கொள்ளுங்கள். அடுத்த அதிகார நந்தியை பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும். இந்த சனி மஹா பிரதோஷ  நன்னாளில் சிவனை குடும்ப சமேதராக தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக!

உங்கள் அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510
Email: astrosundararajan@gmail.com
Web: www.astrosundararajan.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT