செய்திகள்

நாக தோஷம் உள்ளவர்கள் வழிபடவேண்டிய பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்

தினமணி


பட்டீஸ்வரம் உங்களுக்கு அறிந்த ஊர் தான். இங்கு உள்ள பெரிய கோயிலின் வடக்கு வீதியில் தொடர்ந்து மேற்கு நோக்கி சென்றால் சாலை ஓரிடத்தில் திருவலஞ்சுழிக்காக  வடக்கு நோக்கிப் பிரிகிறது, அந்தப் பிரிவை தாண்டி சற்று மேற்கு நோக்கிச் சென்றால் ஒரு இரும்பு ஆர்ச் ஒன்று இடது புறம் காணலாம். அதன் வழி சென்றால் சில நூறடிகளில் பழுதடைந்த சிவாலயம் ஒன்று காணப்படும். அந்தக் கோயில் தான் மேற்றளி மேற்றளி பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்.

எட்டாம் நூற்றாண்டினை சேர்ந்த செங்கல் தளி எனச் சொல்லப்படுகிறது. முதலாம் ஆதித்த சோழனின் மனைவி அழிசி காட்டடிகள் வணங்கிப் போற்றி கொடையளித்த  திருக்கோயில் எனப்படுகிறது.

மூன்று நிலை ராஜகோபுரம் இருந்ததற்கான கல்ஹாரம் காணப்படுகிறது. தற்போது மிகவும் இடிந்து இரு குட்டிச்சுவர்கள் எனும் நிலையில் உள்ளது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் அகன்று விரிந்த முகப்பு மண்டபத்துடன் கூடிய துவிதள கருவறை. சில படிகள் ஏறிச் சென்றால், உள்ளே பெரிய அகன்ற வடிவ பிரம்மநந்தீஸ்வரர் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தார். நான்கிற்கு நான்கு எனச் சதுரமான ஆவுடையுடன் கூடிய பெரிய லிங்கமூர்த்தி. மிக வழுவழுப்பான பாணப்பகுதி பிரமிக்கவைக்கிறது.

10-ம் நூற்றாண்டிலே கட்டப்பட்ட கோயில் என்பதும் பார்த்தவுடன் அறியமுடிகிறது, ராஜராஜனின் கல்வெட்டுப் பகுதி  இக்கோயிலின் கல்ஹாரத்தில் இருப்பதாகக் கூறினார்கள். எனினும் பார்க்கமுடியவில்லை.

கோயிலைச் சுற்றி அருமையான 10, 11-ம் நூற்றாண்டு நாகக்கன்னி , லிங்கோத்பவர், தஷிணாமூர்த்தி, துர்க்கை, பிரம்மா ஆகிய சிற்பங்கள் அதன் பழமை கெடாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நாக கன்னி இயல்பாக அமர்ந்திருக்கும் கோலம்.
  
இக்கோயில் சுதையில் செய்யப்பட்ட செங்கற்றளி கோயில். புனரமைப்பு பணிகள் ஏதும் நடைபெறவில்லை அதனால் அதன் பழமை மாறாமல் உள்ளது. மூன்றாவது கண்ணை எடுத்துச் செல்லவில்லை, இருந்திருந்தால் கருவறை விமான அழகை இன்னும் கொஞ்சம் ரசித்திருக்கலாம். 

பிரம்மன் பூஜித்த பெருமையுடையது. நாககன்னி பூசித்து பேறு பெற்ற தலமாகவும் உள்ளது, இதனால் நாக தோஷமுடையோர் வணங்கி தோஷ பரிகாரம் செய்து கொள்ளலாம். இந்த நாககன்னி சிற்பம் கருவறை கோட்டத்து மாடத்தில் உள்ளது சிறப்பு. அடுத்தாற்போல் தட்சணாமூர்த்தி தென்புறம் நோக்கியபடி உள்ளதைக் காணலாம். தென்முகம் நோக்கி அம்பிகை காட்சியளிக்கிறார். பெயர் இன்னதென்று அறியமுடியவில்லை.

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைய சூதாட்டத்துக்கு தடை பெறுவது அவசியம்: ராமதாஸ்

யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

பாஜக வென்றால் 22 கோடீஸ்வரா்களே நாட்டை ஆள்வா்- ஒடிஸாவில் ராகுல் பிரசாரம்

கடலோர வாழ்வாதார சங்கத்தை மூடக் கூடாது: அண்ணாமலை

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது: ‘நியூஸ்கிளிக்’ நிறுவனரை விடுவித்தது உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT