செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் 

தினமணி

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உத்ஸவம் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. புதன்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது. அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற்றது.
வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை மூலம் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சித் சபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது. 
பஞ்ச மூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2.50 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப் பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பின்னர், சித் சபா பிரவேசம் நடைபெற்றது. இந்த விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
வெள்ளிக்கிழமை பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உத்ஸவம் முடிவடைகிறது. 
நெரிசலால் பக்தர்கள் அவதி: ஆனித் திருமஞ்சன தரிசன விழாவுக்கு வருகை தந்த பக்தர்களை கோயிலின் பிரதான வழியான கீழ சன்னதி வழியாக காவல் துறையினர் அனுமதிக்கவில்லை. மாறாக வடக்கு சன்னதி, தெற்கு சன்னதி, மேல சன்னதி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. 
தரிசனம் முடிந்து கோயிலில் இருந்து வெளியேறும்போதும் நெரிசலால் பக்தர்கள் அவதியுற்றனர். தரிசனத்தின்போது செல்லிடப்பேசியில் பக்தர்கள் புகைப்படம் எடுக்க தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT