செய்திகள்

மக்கள் வெள்ளத்தில் குலுங்கிய காஞ்சிபுரம்: ஒரேநாளில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

தினமணி

அத்திவரதர் பெருவிழாவின் 43-ஆவது நாளான திங்கள்கிழமை ஒரே நாளில் 5 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் நகரம் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தால் குலுங்கியது. 


மஞ்சள் நிறப் பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதர் பெருவிழாவின் 43-ஆவது நாளான திங்கள்கிழமை பெருமாள் மஞ்சள் நிறப் பட்டாடையும், பச்சை நிற அங்கவஸ்திரமும் அணிந்து, பழங்களால் செய்யப்பட்ட ராஜ கிரீடமும், சிவப்பு, வெள்ளை மலர்களால் செய்யப்பட்ட வரிமாலை, மகிழம்பூ மாலைகள் சூடி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலையும், மாலையும் பட்டாச்சாரியார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது.


வரலாறு காணாத மக்கள் வெள்ளம்: அத்திவரதர் பெருவிழாவுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களாக இருந்ததால் இவ்விரு நாள்களும் சுமார் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளாக இருந்ததால் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. திருக்கோயிலின் வடக்கு மாட வீதி,திருக்கச்சி நம்பி தெரு, கிழக்கு கோபுர வாசல், செட்டித் தெரு ஆகிய பகுதிகளில் மக்கள் நடக்கக்கூட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம், கூட்டமாக காணப்பட்டனர்.
முக்கியஸ்தர்கள் வரும் பாதையில் உள்ள பொம்மைக்காரத்தெரு, ஆணைக்கட்டித்தெரு, அமுதப்படித் தெரு, அஸ்தகிரித் தெரு ஆகிய பகுதிகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
முக்கியஸ்தர்கள் வரிசையில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல்: திங்கள்கிழமை வி.வி.ஐ.பி. வரிசையில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. முக்கியஸ்தர்களுக்கான வரிசையில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதாகக் கூறி பக்தர்கள் கைகலப்பில் ஈடுபட்ட போது அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
முக்கியஸ்தர்கள் வரிசையில் காலையில் இருந்த கூட்டத்தை  விட   மாலையில் கூட்டம்  அதிகமாகிக் கொண்டே  இருந்தது. கோயிலுக்கு உள்ளே  சுவாமி தரிசனம் செய்யச் சென்றவர்கள் விரைவாக வெளியில் வர முடியாமலும், வெளியில் இருப்பவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளே போக முடியாமலும் அவதிப்பட்டனர். 
முக்கியஸ்தர்கள் வரிசையில் கூட்ட நெரிசலில் சிக்கி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த புஷ்பா(44), ஈரோடு பகுதியைச் சேர்ந்த கௌசிக் (15) உள்பட 40-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
மயக்கமடைந்தவர்களை காவல்துறையினர் உடனடியாக கூட்டத்திலிருந்து வெளியில் தூக்கி வந்து, அருகில் உள்ள மருத்துவ முகாம்களில் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். காவல்துறையினரின் மனித நேய செயல்பாடுகளை பக்தர்களும் வெளிப்படையாக பாராட்டினார்கள்.  
அத்திவரதர் பெருவிழா நிறைவு பெற இன்னும் ஒரு சில நாள்களே இருப்பதாலும், பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும்,  முக்கியஸ்தர்கள் வரிசையில்  கூட்டமாகச்  செல்ல  அனுமதிக்காமல்  ஒவ்வொருவராகச்  செல்ல    நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  எனவும்  பக்தர்களிடையே  பரவலான   பேச்சு  இருந்தது. 
சென்னை காரமடையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற பக்தர் வி.வி.ஐ.பி.வரிசையில் சுவாமியை தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆனதாக தெரிவித்தார். பொது தரிசனப் பாதையில் சென்று தரிசனம் செய்ய 8 மணி நேரம் ஆனது.


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தரிசனம்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சுந்தரமூர்த்தி, சார்-ஆட்சியர் எஸ்.சரவணன், பட்டாச்சாரியார் கிட்டு ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். 
அத்திவரதரை தரிசித்த பின்னர் கோயில் பட்டாச்சாரியார்கள் தெலங்கானா முதல்வருக்கு அத்திப்பழ மாலையும், சால்வையும் அணிவித்து, அத்திவரதரின் திருவுருவப்படமும், கோயில் பிரசாதமும்  வழங்கினர். 
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன், ஆந்திர மாநில நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவும் அத்திவரதரை தரிசனம் செய்ய வந்திருந்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் தனது குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா, மாவட்ட நீதிபதி சந்திரன், கூடுதல் மாவட்ட நீதிபதி கயல்விழி ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், திருச்சி தொகுதி காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தமிழக பா.ஜ.க. தலைவர்களில்  ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் அத்திவரதரை திங்கள்கிழமை தரிசனம் செய்தனர்.
5 லட்சம் பேர் தரிசனம்: 
43-ஆவது நாளான திங்கள்கிழமை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

திட்டமிட்டபடி ஆக.16-இல் அத்திவரதர் தரிசனம் நிறைவு
அத்திவரதர் தரிசனம் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆக.16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அத்திவரதர் பெருவிழா கடந்த 43 நாள்களாக காஞ்சிபுரத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
இவ்விழாவில் அத்திவரதரை பொதுமக்கள் தரிசனம் செய்வது வரும் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். 17-ஆம் தேதி ஆகம விதிகளின்படி சடங்குகள் செய்யப்பட்டு அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் வைக்கப்படுவார். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே  இருப்பதால்  பக்தர்கள்  தங்குவதற்கு  வசதியாக கூடுதலாக 3 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
வந்தவாசி, உத்தரமேரூர் வழியாக வரும் பக்தர்களுக்காக கீழ்கதிர்ப்பூர் பி.ஏ.வி. பள்ளிக்கு அருகிலும், சென்னை, அரக்கோணம், வேலூர், ஆந்திரம், கர்நாடகம் வழியாக வரும் பக்தர்களுக்காக கீழ்கதிர்ப்பூர் எஸ்ஸார் பெட்ரோல் பங்க் அருகிலும், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக வரும் பக்தர்களுக்கு நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி அருகிலும் என மொத்தம் 3 தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை மூன்றிலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், கழிப்பறை வசதிகள், மின்சார வசதி, இரவில் உறங்குவதற்கான வசதிகளும் போதுமான அளவு  செய்யப்பட்டுள்ளது. உணவுக் கூடங்களும்  தனியாக  அமைக்கப்பட்டு, உணவு  தயாரித்து  வழங்கப்படுகிறது. தங்குமிடங்களிலிருந்து  25 சிற்றுந்துகள் மூலம் பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.  தேவைப்பட்டால் கூடுதலாக சிற்றுந்துகளை இயக்கவும் தயாராக இருக்கிறோம். கடந்த 10 நாள்களாக முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தனியாக தரிசனப்பாதை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது ஏ.டி.ஜி.பி. ஜெயந்த்முரளி, அத்திவரதர் பெருவிழாவுக்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளான கே.பாஸ்கரன் (ஊரக வளர்ச்சித்துறை), என்.சுப்பையன்(தோட்டக்கலைத் துறை)ஆகியோர் உடனிருந்தனர்.

அரசுப் பேருந்துகளில் காஞ்சிக்கு தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் வருகை 
அத்திவரதர் பெருவிழாவுக்கு பேருந்துகள் மூலம் தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை தருவதாக தமிழக போக்குவரத்துத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அத்திவரதர் பெருவிழாவையொட்டி ஒலிமுகம்மது பேட்டை, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, ஓரிக்கை ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களை போக்குவரத்துத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  கூறியது:  
அத்திவரதர் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து 861 முறை சென்று திரும்பும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
தற்போது மேலும் கூடுதலாக 1,261 முறை சென்று திரும்பும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
திருத்தணி,திருப்பதி, செங்கல்பட்டு, வேலூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருவண்ணாமலை, தாம்பரம், திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, ஆரணி ஆகிய பகுதிகளிலிருந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு போதுமான அளவுக்கு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்களை கோயில் வரை அழைத்துச் செல்ல சிறப்பு   சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
பொதுமக்கள் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்ல வெகுநேரமாகும் என்பதால் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் சிற்றுந்துகளை இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 70 ஆயிரம் பேர் வரை அத்திவரதரை தரிசிக்க அரசுப் பேருந்துகள் மூலமாக காஞ்சிபுரத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசிக்க போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்யுமாறு போக்குவரத்துத்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT