செய்திகள்

எவ்வளவு மருத்துவம் செய்தும் குழந்தை பாக்கியமில்லையா? சோமவார அமாவாசையில் அரசமரம் சுற்றுங்க!

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களைத் தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு,

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களைத் தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு எனப் பல மரங்களுக்கு முக்கிய  இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தனி சிறப்பு அதிகம். வரும் திங்கள் கிழமை (4/2/2019) விளம்பி வருஷத்தில் உத்திராயண புண்ய காலத்தில் தை   அமாவாசை சோமவார அமாவாசையாக வருகிறது. சோம வார அமாவாசையில் திருமணத்தடையுள்ளவர்களும் புத்திர தோஷம் உள்ளவர்களும், கல்வி தடையுள்ளவர்களும், தீராத கடன் உள்ளவர்களும் அரசமரபிரதக்ஷிணம் செய்தால் கைமேல் பலன் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

தெய்வ வடிவங்களாகக் கருதப்படும் பலவகை மரங்களுள் அரசமரம் முதன்மையானது. மரங்களின் அரசன் என்று போற்றப்படுவது, அரச மரமாகும். இதில் மும்மூர்த்திகளும்  வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை வர்ணிப்பார்கள். பிரம்மாவின் சக்தி இம்மரத்தில் இருப்பதால் அரசமரக்காற்றை  நாம் சுவாசித்தால் ஆயுளும் வளரும். ஆரோக்கியம் சீராகும். புத்திர பாக்கியம் கிடைக்கும். அரசமர இலைகளின் சலசலப்பு ஆலய மணிபோல இருக்கும். அரசமரத்தடியில்  விநாயகப் பெருமானையும், நாகராஜனையும் வைத்து வழிபடுவது வழக்கம். இவர்களை வழிபட்டால் காரியத்தடைகள் அகலும். கனிவான வாழ்க்கை அமையும்.

விஞ்ஞான உண்மை

அரசமரத்தைச் சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசனை நம்பி புருசனை கைவிட்டாள்" என்ற பழமொழி  வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள்  சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

'அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் "என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை  உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பைக் கோளாறுகளை போக்கும் தன்மையுடையது.  அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

ராஜவிருட்சம்

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம்  என்று அழைக்கப்படுகிறது. 'மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்" என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதன காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில்  இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச  மரம்தான். அரசு நீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து  காணப்படும் மரங்களிலேயே அரசமரம்தான் மிகவும் உணர்வுப்பூர்வமானதும் மிகப் புத்திசாலியான மரமும் கூட. அந்த மரத்தில் மற்ற மரங்களில் இல்லாத ஒருவகையான  அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் புத்திசாலித்தனம் வளர மிக அத்தியாவசியமான ஒன்று என்பதை மிக சமீபத்தில்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்பதை  அறிந்தால் அனைவரும் வியப்படையக்கூடும். புத்தர் அந்த மரத்தின் கீழ் ஞானம் பெற்றது ஒரு தற்செயலான செயல் அல்ல!

கருப்பைக் கோளாறு

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றைப் பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது  விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு  மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்னைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

ஜோதிடத்தில் அரசமரம்

ஜோதிடத்தில் தெய்வாம்சம் எனும் இடங்களில் எல்லாம் குருவை குறிப்பிடுகின்றோம். தெய்வாம்சம் பொருந்திய ஞானம் தரும் மரங்களை குருவின் அம்சமாகவே  போற்றப்படுகிறது. இம்மரத்தின் குச்சிகளை ஹோமங்களுக்கு குருவிற்கான சமித்தாகப் பயன்படுத்துகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. பாலுள்ள மரங்களை சுக்கிரன் மற்றும்  சந்திரனின் அம்சம் கொண்டதாக பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் அரசமரத்தின் மருந்துவ குணங்களும் சுக்கிரனின் காரகத்தைக் கொண்டதாகவே  அமைந்திருக்கிறது. மிகப்பெரிய உருவமுள்ள மரங்களை சனைஸ்வர பகவானின் அம்சமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் விருக்‌ஷ சாஸ்திரத்தில் அரச மரத்தை பூச நட்சத்திர விருக்‌ஷமாக கூறப்பட்டுள்ளது. பூச நட்சத்திரம் சனைச்சர பகவான் ஆதிக்கம் பெற்ற நட்சத்திரமாகும். பூச  நட்சத்திரத்தின் அதிதேவதையாகத் தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும் பிரகஸ்பதி (குரு பகவான்) பழம்பெரும் ஜோதிட நூலான நட்சத்திர சிந்தாமணியில்  விவரிக்கப்பட்டுள்ளது.  பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்அரச மரத்தின் அடியில் அமர்பவர்களுக்கும் சனைச்வரன் அருளோடு குருவருளும் இணைந்து கிடைப்பதால் தான்  ஆன்மீகத்தில் சிறந்து விளங்குகிறார்கள். இதுவே போதிமரத்தின் அறிவியல் மற்றும் ஆன்மீக ரகசியமாகும். அரச மரத்தின் அடியில் பல பஞ்சாயத்துக்கள் மற்றும் வழக்குகள்  தீர்க்கப்படுவதை கிராமங்களில் பார்க்கலாம்.  குரு மற்றும் சனைச்சரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் சிறந்த நீதிமான்களாக விளங்குவதைக் காணலாம். 

ஒருவருக்கு திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் இரண்டிற்கும் குருவின் அருளோடு சுக்கிரன் மற்றும் சனைஸ்வரரின் அருளும் வேண்டும். குரு,சுக்கிரன் சனி  சேர்க்கை  ஏழாமதிபதியோடு அமையும்போது திருமண பாக்கியமும் ஐந்தாம்/ஒன்பது அதிபதியோடு ஏற்படும்போது குழந்தை பாக்கியமும் ஏற்படுகிறது. சுக்கிரன்,  சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்தியத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும்  இவரே காரகம் வகிக்கிறார். ஒரு தம்பதியின் ஜாதகங்களில் குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல  அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

அரச மரத்தில் அக்னிபகவான் ஒளிந்திருப்பதாகவும் சூரியனின் குதிரையின் அம்சமாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் இதன் மருத்துவ குணங்கள் ஆண்களுக்கு  ஆண்மையைப் பெருக்கி குதிரையின் சக்தியை அளிக்கிறது. சனைஸ்வர பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் , திருமணத் தடை போன்றவற்றிற்கு அரசமரபிரதக்ஷிணம்  சிறந்த பயனளிக்கும் பரிகாரமாகும். "குரு கொடுத்தால் சனி தடுப்பார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார்" என்பது ஜோதிட பழமொழி.

சனி தசை, சனி புத்தி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்ற காலங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கற்பதில் மந்தம், கல்வித்தடை ஆகியவை விலக  அரசமர பிரதக்ஷிணம் மிகச் சிறந்த எளிமையான பரிகாரமாகும்.மேலும் அரசமரத்தடியில் அமர்ந்து படிப்பதும் கல்வியும் ஞானமும் வளர வழிவகுக்கும். அந்த காலத்தில்  குருகுல கல்விமுறையில் அரசமரத்தடியில் குருமார்கள் கல்வி கற்பித்தது குறிப்பிடத்தக்கது. இம்மரத்தைச் சுற்றி வந்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின்  அருளும் நமக்குக் கிடைக்கும். 

சூரியனின் தேரிலுள்ள ஏழு  குதிரைகளின் அம்சமாக அரசமரம் பூமியில் தோன்றியதென்பர். எனவே இம்மரத்தை எப்போதும் ஏழு முறைவலம்வரவேண்டும். உதயகாலத்தில்  பூஜிப்பதும் முக்கியம். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மரத்தை குறிப்பிட்டிருப்பினும், அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமானது அரசமரம் ஒன்றே. இம்மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும்,மேல்பகுதியில் சிவனும் நித்ய வாசம்செய்வதாகக் கூறப்படுகிறது.

"மூலதோ பிரம்ஹரூபாய
மத்யதோ விஷ்ணு ரூபிணே|
ஆக்ரத: சிவரூபாய
விருக்ஷராஜாய தே நம||

என்னும் மந்திரம் கூறி அரசமரத்தை வணங்கவேண்டும்.திருமணத்தடை நீங்கி குழந்தைபேறு, மகிழ்ச்சியான வாழ்க்கை மூன்றுமே  ஸோமவார அமாவாசையில்  அரசமரத்தை சுற்றுவதால் கிடைக்கும் என்பது நிதர்ஸனம். அரச மரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் மற்ற நாட்களில் சூரியோதயத்திலிருந்து  இரண்டுமணிநேரத்திற்கு மேலும் சுற்ற கூடாது என வேத சாஸ்திர நூல்கள் குறிப்பிடுகின்றன.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

பாஜக மாநில செயலாளருக்கு எதிரான புகார்: சேலம் நீதிமன்றத்துக்கு உத்தரவு

இரவு முதல் பலத்த மழை! புது தில்லிக்கு இன்றும் சிவப்பு எச்சரிக்கை

திரௌபதி அம்மன் கோயிலில் பூணூல் மாற்றி வழிபாடு!

தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை: திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT