நாம் இன்று சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குருவைத் தொடர்ந்து சுக்கிரன், சனி, மற்றும் நிழல் கிரகங்களால் ஜோதிட விதிப்படி ஏற்படுத்தும் பொதுப்படையான நோய்களின் விளக்கத்தையும் அதன் சிறு தீர்வுகளைப் பார்ப்போம். நோய்கள் பலவகை உண்டு அவை பரம்பரையாக அதாவது பிறக்கும்பொழுது தொடரும் நோய் (DNA), தானே தேடிக்கொள்ளும் நோய்கள், உணவின்மூலம் மற்றும் பஞ்சபூதத்தால் ஏற்படும் தொற்று நோய்கள், விபத்தின் மூலம் ஏற்படக்கூடிய நோய்கள், தவறான மருந்துகளை உட்கொள்வதால் வரக்கூடிய நோய்கள் கிரகங்களின் நாடிப்படி அதன் தசாபுத்தி காலங்களில் உடலில் மாற்றம் ஏற்படும்.
சுக்கிரன் பற்றிய சிறு தொகுப்பு
இரவில் நிலவின் அருகில் புலப்படும் சுக்கிரன் பிருகுவின் மகனாக மகம் நட்சத்திரத்தில் பிறந்த சுக்ராச்சாரியார், வான்வெளியில் ஆறாவது கிரகமாக பிரகாசமாக ஜொலிக்கிறார். சுக்கிர பகவான் மிகச்சிறந்த சிவபக்தர், அதனால் சிவ அருளால் அமிர்த சஞ்சீவினி என்ற மந்திரத்தைக் கற்றவர், இவற்றின் மூலம் அசுரர்களுக்கு இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொடுப்பார். இவருடைய வாகனம் கருடன் என்பதால் என்னவோ சுக்கிரன் பெருமாளாக கொண்டாடப்படுகிறார். சுக்கிரன் என்றாலே ஆடம்பர ஆசை தூண்டுபவர், பிரகாசமானவர், பெண் மற்றும் பொன் ஆசை ஏற்படுத்துவார். இவரை அசுர குரு என்றாலும் இவர் சுபக்கிரகமே. காலபுருஷ தத்துவப்படி 2, 7 (ரிஷபம், துலாம்) என்னும் தனம், குடும்பம் மற்றும் திருமணம் என்று தன்னுள் வைத்து 12ம் வீடான மீனத்தில் குருவின் வீட்டில் சுக்கிரன் உச்சம் அடைந்து ஆசைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து கடவுளின் பாதம் அடைய ஒரு சிறந்த வழி என்கிறது நம் பிரபஞ்சத்தின் தத்துவம்.
பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே.
ஒரு ஜாதகனுக்கு 12, 3, 6, 8 ஆகிய இடங்களில் சுக்கிரன் பலமுடன் இருந்தால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், வாதநோய், மர்ம உறுப்புகளில் நோயுறுதலும், வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம், பாண்டு, குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12ல் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவபரம் பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக என்று விளக்குகிறார் புலிப்பாணி.
சுக்கிரன் என்பவர் மற்ற கிரகங்களை வடிவை மாற்றம் கொடுப்பவன் சுக்கிரன் என்று சொல்லலாம். எடுத்துக்காட்டாகச் செவ்வாய் என்பவர் நிலத்தைக் குறிப்பவர் சுக்கிரன் என்பவர் அவற்றின் மேல் கட்டிடமாகக் கூறப்படுவர் . ஒருவருக்கு சுக்கிரன் நன்றாக இருந்தால் கட்டிய வீடு வாங்கலாம். இவரை வெள்ளி, மால், சுங்கன், அசுர குரு, சல்லியன், மலைகொள், களத்திரகாரகன், என்றழைப்பர்கள்.
சுக்கிரனால் வரக்கூடிய நோய்கள்
சுக்கிரன் பாதிப்பு ஏற்பட்டால் கிட்னி சம்மந்தமான நோய், சிறுநீரகத்தில் கற்கள், சிறுநீர் கட்டு, சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், வாத நோய், கபம், கன்னத்தில் பொறி, தோல் மாற்றம் மற்றும் வெடிப்பு, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு (imbalance) மற்றும் கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட நோய்கள், கண்ணின் ஒளி பாதிப்புகளான- மாலைக்கண் நோய், கண்களில் பூ விழுதல், நீர்க் கட்டி , உடலில் உப்பு சத்து அதிகப்படுத்தல், நீர் மூலம் பரவும் நோய்கள் , சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பினை அதிகப்படுத்தல், விந்தணுக்கள் குறைபாடு, பிறப்புறுப்பு நோய்கள் புண், அரிப்பு மற்றும் பால்வினை நோய்கள், உடலில் நீர்ச் சத்துக் குறைவு, மர்ம நோய்கள், சுரப்பிகள், ஆறாத புண்கள், போதை வஸ்துக்கள் மூலம் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.
பெரும்பாலும் பெண்களுக்குச் சுக்கிரனால் ஏற்படும் நோய் கொஞ்சம் அதிகம். சுக்கிரன் பாதகாதிபதி பார்வை, பகை கிரக சேர்க்கை தொடர்பு பெற்றால் உடல் எப்போதும் கழிவுநீரால் துர்நாற்றம் அடிக்கும், முக்கியமாக சுக்கிரன் 3ல் இருத்தல் இதே நிலைமைதான். ஜாதகத்தில் யோகமற்ற பாதகமான நிலையில் நீர் ராசியில் சுக்கிரன் இருந்தால் கிட்னி சம்மந்தமான நோய், சர்க்கரை நோய், அதிகரிப்பு ஏற்படும்.
உணவாகத் தீர்வு
சுக்கிரனால் ஏற்படும் நோய்கள் அகற்ற சில உணவு வகைகளான, மொச்சை, நீர் காய்கறிகள், புளிச்சக்கீரை, வாதநாரயண இலை, சாமை அரிசி, இஞ்சி, நாவல் பழம், நன்னாரி, நொச்சி, வேப்பிலை நெல்லிக்காய், அத்திக் காய் கூட்டு, அத்தி இலை சார், உலர்ந்த அத்திப் பழம் உட்கொள்ளலாம். அத்தி என்றவுடன் அத்தி வரதர் நினைவில் வரும். பெருமாளே அத்தியில் உள்ளார் என்றால், எவ்வளவு மகாசக்தி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அத்திப்பழத்தில் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம், மங்கனீசு, இரும்புச் சத்து, வைட்டமின் B6, புரதச் சத்து என்று அனைத்தும் உள்ளது.
ஒரு மனிதன் தினமும் அதிக தண்ணீர் பருக வேண்டும், அதே அளவு சிறுநீர் வெளியேற வேண்டும். சூடு நீர் குடித்தால் மற்றும் சுடுநீர் குளியல் என்பது நன்று. இரவில் ஒரு ஸ்பூன் அளவு திரிபலாதி சூரணம் என்று உட்கொள்ள வேண்டும். இதுவும் மருத்துவரின் ஆலோசனைப் படி சாப்பிட வேண்டும்.
சனி
இரவு வானில் சூரியக் குடும்பதில் ஒருவரான சனீஸ்வரரை வெறும் கண்ணால் எந்த கருவியும் இன்றி பார்க்க முடியும். குருவிற்கு அடுத்த பெரிய கோளான இவர் பூமிக்கு தொலைவில் உள்ளார். சனிக்கோள் மஞ்சள் நிறத்தில் மின்னாமல் பளிச்சென்று தெரியும். சுக்கிரனின் மித்ரனாகிய சனீஸ்வரன் என்ற சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தில், காசிப கோத்திரத்தில் சூரியன் புத்திரனாக ஜனனமானார். கரிய நிறம் கொண்ட கர்மா காரகன் என்ற மகாகோளுடன் இந்த பிரபஞ்சத்தை அடக்கி ஆள்கிறார் இவரை கருத்தவன், மந்தன், அந்தகன், கரியவன், காரி, நீலன், முடவன், முதுமகன், திமான், நியாயவாதி, தொழில் காரகன் என்றழைப்பார்கள். தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார் தன் தந்தை சூரியன் உச்சமாகும் இடத்தில் நீச்சத்தன்மை பெறுவார். நம் கடவுளால் உருவாக்கப்பட்ட ஆத்ம காரகனின் மகன் சனீஸ்வரன் ஆயுள் காரகனாகவும் மற்றொரு மகன் யமன் ஆயுளைப் பறிக்கும் தொழிலை செய்பவனாக திகழ்கிறார்.
சனியால் ஏற்படும் நோய்கள்
ஜாதகத்தில் யோகமில்ல ஜாதகருக்கு ஏற்படும் நோய்கள் கால் வலி, வாதநோய் முக்கியமாக முடக்குவாதம், வாயு தொல்லை, கடின உழைப்பால் ஏற்படும் சோர்வு, உளநிலை மாற்றம், பித்துப் பிடித்தல், அஜீரணம், இடுப்புக்கீழ் பிரச்னை, அழுக்கு சேரும் பகுதி, அடிவயிற்றுப் பிரச்னைகள், பற்சொத்தை, ஹீமோகுளோபின் குறைபாடு, இரும்பு சத்து குறைபாட்டால் ஏற்படும் உறுப்பு பாதிப்பு, இன்னும் பல சனியால் மற்றும் யோகர் இல்லாத கிரக சேர்க்கையால் ஏற்படும் நோய்கள் உண்டுபண்ணும். ஜாதகத்தில் செவ்வாய், சனி நிற்கும் ராசிகள் குறிக்கும் உடல் பாகங்களில் ஏதாவது ஒரு நோய் இருக்கும். சனி கிரகம் ஒருவரின் உடலில் இருக்கும் வாதம், மந்த வாயு பற்றிய அளவீட்டைக் காட்டும்.
சிறு தீர்வு
சனியின் காரகத்துவம் கொண்ட இரும்பு பாத்திரங்களில் சமைக்க வேண்டும். இரும்புச் சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் குளியல் குளிக்க மற்றும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
விளக்கெண்ணெய், வேப்ப சார், சுண்டக்காய், மணத்தக்காளி, மாதுளை பழம், பசும்பால், பீட்ரோட் சார் மற்றும் நார்ச்சத்து உணவுகள் உடலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முக்கியமாக கால் பகுதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அழுகிய மற்றும் பழைய பொருட்களைச் சாப்பிடக்கூடாது சுக்கிரன் பலம் குறைவாக உள்ளவர்கள் வெள்ளி ஆபரணங்கள் முக்கியமாக இடுப்புக்கீழ் பகுதிகளில் நகைகளாக அணியவேண்டும். இரவில் மோரில் கடுக்காயை ஊறவைத்து அதைக் காலையில் குடிக்கலாம் தேவையேற்றன வெளியில் வந்துவிடும். புளி உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது.
ராகு - கேது
ராகு கேதுகள் ஒரு மாயையானா நிழல் கிரகம் என்று கூறலாம். ஒருவரது ஜாதகத்தில் ராகு கேது கிரகங்களால் யோகமும் அவயோகமும் உண்டு. ராகு பரணி நட்சத்திரத்திலும் கேது ஆயில்யம் நட்சத்திரத்திலும் பிறந்தவர்கள் என்று ஜோதிட கூற்று. ராகு கேதுவால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு ஏற்படுத்தும் அதனால் நோயின் தாக்கமானது அதிகப்படுத்தி உறுப்புகளை உடைக்கும் தன்மை கொண்டவர்கள். முக்கியமாக இதய நோய், விஷம் சம்மந்தப்பட்ட பிரச்னைகள், புற்றுநோய், உடலில் கெட்ட நாற்றம் வீசும், குடல் நோய், குஷ்டம் மற்றும் தோலில் ஏற்படும் பிரச்னைகள், வம்ச வழி நோய்கள், சுவாசக் கோளாறு அதிகப்படுத்தல், விஷ வாயு தாக்கலாம். பீடி, சிகரெட் குடிப்பதால் வரக்கூடிய புற்றுநோய், தொழுநோய், மூளையில் நோய், இருதய கோளாறு, நெருப்பால் பயம்,விஷத்தால் கண்டம், எதிரிகளால் பாதிப்பு விபத்தால் கண்டம், மனச்சோர்வு, வெட்டுகாயம், உடல் வலி இன்னும் அதிக தொல்லைகள் உருவாக்குவார்கள். ஜாதகத்தில் ராகு மற்றும் கேது தசை நடக்கும்பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
உறுப்புகள் மற்றும் நோய்களுக்கான கடவுளை வரும் பகுதியில் பார்ப்போம்.
குருவே சரணம்
- ஜோதிட சிரோன்மணி தேவி
தொலைபேசி: 8939115647
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.