செய்திகள்

ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று! விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க..!!

DIN

ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தி இன்று! விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடியது சங்கடஹர சதுர்த்தி.

சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். வருடம் முழுவதும் வரும் சங்கடஹர சதுர்த்தியை விட, மஹா சங்கடஹர சதுர்த்தி மிகவும் விசேஷமானது.

விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியன்று நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகப் பெருமானின் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அறுகம்புல் மாலை சாற்றி வழிபடலாம். 

ஆலயத்தை 11 முறை வலம் வருதல் வேண்டும். அனைத்துப் பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து சந்திரனைத் தரிசித்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். பிறகு இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முழு விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் மாலையில் விநாயகப் பெருமானின் ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதத்தைப் பூர்த்தி செய்யலாம். விநாயகர் துதி பாடல்கள், விநாயகர் அகவலைச் சொல்லி வழிபடலாம்.

யாரெல்லாம் விரதம் இருக்கலாம்..

குழந்தை இல்லாதவர்கள், நோய் உள்ளவர்கள், கல்யாண ஆகாதவர்கள், நல்ல வேலை கிடைக்க என அனைத்துவகை பிரார்த்தனைக்கும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். 

விரதத்தின் பலன்கள்

ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதமிருந்தால் நோய்கள் குணமடைந்து உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் தொடர்ந்து ஏற்படும் துன்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலையை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்திக்கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம் எனப் பலவிதமான நன்மைகளை அடைய முடியும். 

முக்கியமாக மனோகாரகன் எனும் சந்திரனின் அருளும் சேர்ந்து கிடைக்கும். சந்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சந்திர பகவானின் தாக்கம் குறையும். நினைத்ததை நிறைவேற்றும் இந்த சங்கடஹர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை மனமுருகி வழிபட்டு கணபதியின் அருளைப் பெற்றிடுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

SCROLL FOR NEXT