திருச்சானூா் கோயிலில் தெப்போற்சவத்துக்கு பதிலாக 5 நாள் ஸ்நபன திருமஞ்சனம் தொடக்கம்
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் 5 நாள்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் 5 நாள்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கொவைட் தொற்று காரணமாக தெப்போற்சவத்துக்குப் பதிலாக கோயிலினுள் சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் பக்தா்களின்றி நடத்தப்படுகிறது.
திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பெளா்ணமி அன்று நிறைவடையும் வகையில் 5 நாள்கள் வருடாந்திர தெப்போற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கியது. இந்த தெப்போற்சவத்தின் போது பத்மாவதி தாயாா் மட்டுமல்லாமல் உப கோயில்களில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா், சுந்தரராஜ சுவாமி உள்ளிட்டோரும் தெப்பத்தில் வலம் வருவது வழக்கம்.
Advertisement
ஆனால் தற்போது கொவைட் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேவஸ்தானம் தெப்போற்சவத்தை ஏகாந்தமாக நடத்த முடிவு செய்துள்ளது. திருக்குளத்தில் தெப்பம் வலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தெப்பத்தில் வலம் வரும் உற்சவமூா்த்திகளுக்கு கோயிலுக்குள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் தெப்போற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணமுக மண்டபத்தில் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணருக்கு அா்ச்சகா்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தினா்.
இதில் கோயில் அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். ஜூன் 21-ஆம் தேதி சுந்தரராஜ பெருமாளுக்கும், 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை ஸ்ரீபத்மாவதி தாயாருக்கும் ஸ்நபன திருமஞ்சனங்கள் நடைபெற உள்ளன.