சென்னை திருவொற்றியூரில் அருள்பாலித்து வரும் அருள்மிகு வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர், புற்று வடிவ சுயம்பு லிங்கத் திருமேனியை காண செல்லும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள் உள்ளன.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பௌர்ணமியை முன்னிட்டு டிசம்பர் 4ஆம் தேதி இரவு 7 மணி முதல் வரும் 6ஆம் தேதி இரவு 8 மணி வரை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் நிஜரூப தரிசனத்தை பக்தர்கள் காண வழி வகை செய்யப்பட்டுள்ளது.
நிஜரூப தரிசனம் காண, திருவொற்றியூர் செல்லும் பக்தர்களுக்காக அங்கு பொது தரிசனம், ரூ.25 மற்றும் ரூ.100க்கான கட்டண தரிசனங்களுக்கு தனித்தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, ரூ.100 செலுத்தி விரைவாக சுவாமியை தரிசிக்கலாம் என நினைத்து ஏராளமான பக்தர்கள் அந்த வரிசையில் நின்றுவிடுகிறார்கள். ஆனால், ரூ.25 மற்றும் பொது தரிசனத்திலும் கூட்டம் காணப்படுகிறது. இந்த மூன்று வரிசைகளைத் தாண்டி முக்கிய பிரமுகர்களுக்கான வரிசையும் உள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பொது தரிசனமும், ரூ.25 கட்டண தரிசனமும் விரைவாகச் சென்றுவிடுகிறது. இதில் பக்தர்கள் எங்கும் நிறுத்தப்படுவதில்லை. நீண்ட வரிசையாகக் காணப்பட்டாலும் விரைவாகச் செல்வதையும் ரூ.100 கட்டண வரிசையில்தான் அனைத்து முக்கிய பிரமுகர்களும் அனுப்பப்படுவதால், அவர்கள் செல்லம்போதெல்லாம் ரூ.100 கட்டண வரிசை நிறுத்தப்பட்டு பல மணி நேரம் வரிசையில் நின்று சுவாமியை தரிசிக்கும் நிலை ஏற்படுவதாக, சுவாமியை தரிசித்து வந்த பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.100 செலுத்தியவர்கள் வரிசை சுவாமிக்கு சற்று அருகேயும் பொது மற்றும் 25 ரூபாய் வரிசை அதற்கு பின் செல்வது மட்டுமே வித்தியாசம் இருப்பதால், அதிக நேரம் நிற்க முடியாதவர்கள் பொது தரிசனம் அல்லது ரூ.25 தரிசனத்தில் செல்வதே சிறந்தது என்றும் கூறுகிறார்கள். இது நேற்றைய நிலை. இன்று அதிகாலை முதலே கோயிலில் கூட்டம் அதிகமாகக் காணப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.100 மற்றும் ரூ.25 கட்டணங்கள் அனைத்தும் ரொக்கமாகவே பெறப்படுகிறது. யுபிஐ வசதி இல்லை என்பதால் பக்தர்கள் அதனையும் கவனத்தில் கொள்வது நல்லது.
மேலும், சுவாமியைக் காண செல்வோர் கட்டாயம் கையில் குடிநீர், பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்வது அவசியம். குறைந்தது 5 மணி நேரம் முதல் வரிசையில் காத்திருக்க வேண்டியது இருப்பதால், உடல்நிலை பாதிப்பு இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆண்டு முழுவதும் கவசத்துடன் காட்சியளிக்கும் ஆதிபுரீஸ்வரர், 365 நாள்களில், வெறும் 3 நாள்கள் மட்டுமே நிஜரூப தரிசனமாக, புற்று வடிவில் காட்சியளிக்கிறார். மற்ற நாள்களில், பெட்டி போன்ற கவசம் சாத்தப்பட்டு மூடிய படியே அருள் பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில், கவசம் திறக்கப்பட்டு, அன்று மாலை இறைவனுக்கு புனுகு மற்றும் சாம்பிராணி தைலங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். பிறகு, பக்தர்கள் தரிசனத்துக்காக நிஜ ரூப தரிசனமாக சுவாமி காட்சியளிப்பார்.
பிறகு, மூன்றாம் நாள் இரவில் மீண்டும் சுவாமிக்கு கவசம் சாத்தப்படும். அடுத்த ஆண்டு கார்த்திகையில் மட்டுமே அந்த கவசம் நீக்கப்படும்.
இவர் சுயம்புவாக இருப்பதாலும், தீண்டா திருமேனியாக இருப்பதாலும் நாள்தோறும் அபிஷேகம் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.