எண்ணியது இனிதாய் நடக்கப்போகும் 2026 ஆங்கிலப் புத்தாண்டுக்கான பொதுப் பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விஸ்வாவசு வருஷம் தக்ஷிணாயம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்ல பக்ஷ திரயோதசி - புதன்கிழமை பின்னிரவு வியாழக்கிழமை முன்னிரவு - ரோகினி நக்ஷத்ரம் - சித்தயோகம் - கன்னியா லக்னம் - ரிஷப சந்திரா லக்னம் - மகர திரிகோணம் - ரிஷப நவாம்சம் - மேஷ சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2026ம் ஆண்டு பிறக்கிறது.
2026 பிறக்கும் போது இருக்கும் கிரகநிலை – வாக்கிய பஞ்சாங்கப்படி
சூரியனின் ஆதிக்கம் பெற்ற எண் 2026 இந்த வருடத்தின் கூட்டு எண்: 2 + 0 + 2 + 6 = 10 = 1 + 0 = 1. ஒன்று என்பது சூரியனின் ஆதிக்கம் பெற்ற எண். சிவனிற்கும் சூரியனிற்கும் நடராஜருக்கும் உகந்த எண் ஒன்றாகும். ஆண்டு பிறக்கும் நேரத்தில் லக்னாதிபதி புதன் சுக ஸ்தானத்தில் மிகப் பெரிய கூட்டணியுடன் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி புதன் சுகஸ்தானத்தில் கேது சாரம் பெற்றிருக்கிறார். லக்ன தொழில் அதிபதி புதன் - விரையாதிபதி சூரியன் - தைர்ய அஷ்டமாதிபதி செவ்வாய் - தனவாக்கு பாக்கியாதிபதி சுக்கிரன் ஆகியோர் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். குடும்பாதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். குருவின் சஞ்சாரத்தால் கன்னிமார்களுக்குத் தகுந்த மணமாகும். மாலை வாய்ப்புகளும் - மழலை பாக்கியமும் - வேலைவாய்ப்புகளும் வியக்கும் விதத்தில் இருக்கும். பத்திரிகைத்துறை - எழுத்துதுறை - ஆசிரியர் துறை - கணிதம் - ரசாயனம் - ஆன்மிகம் - ஜோதிடம் - வழக்குரைஞர் துறை - புத்தகத்துறை போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
சுக்ரன் தனது சஞ்சாரத்தை யோக ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறை செழிக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் கலைஞர்கள் கௌரவப்படுத்தப்படுவார். வண்ணத்திரை சின்னத்திரை இரண்டுமே மக்களுக்குப் பயனளிக்கும். உணவிற்கு எந்த விதமான பங்கமும் இராது. உணவு உற்பத்தியாளர்களுக்குத் தகுந்த விலை நிர்ணயமாகும். மக்களுக்குப் பொருளாதார நிலை உயரும். பெட்ரோல் - டீசல் - கச்சா எண்ணை - சமையல் எண்ணெய் விலை அதிகமாக உயரும். புத்தாண்டு பிறக்கும்போது உள்ள புதனின் இருப்பால் இந்திய ரூபாயின் மதிப்பில் சலனம் இருக்கும். தங்கம் - வெள்ளி விலையும் உயரும். நிறைய சிவாலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். அரசாங்கத்தில் சிறு சிறு ஊசல்கள் இருக்கும். மழை பொழிவு நன்றாக இருக்கும்.
சராசரி வெயில் அளவை விட இந்த வருடம் வெப்பம் அதிகரிக்கும். அண்டார்டிகா - அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் - சுமத்ரா தீவு - ஜப்பான் போன்ற இடங்களில் பூகம்பம் வர வாய்ப்புள்ளது. யாராலும் சரியான முறையில் வானிலையைக் கணித்துக் கூற முடியாத நிலை ஏற்படலாம். அணு ஆயுதத்தால் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். தண்ணீர் தேவை அதிகமாகும். காடுகளை அழிப்பது அதிகமாகும். கடவுளுக்கு எதிராகப் பேசும் நபர்கள் அதிகமாவார்கள்.
பொது பலன்கள்
வெளிநாட்டின் வருவாய் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தொழில் வளர்ச்சி பெறும். முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நாடு முன்னேற்றமடையப் பாடுபடுவார்கள். உள்நாட்டில் வேலைவாய்ப்பு பெருகும். புதிய நவீன ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும். அறிவியலில் ஒரு இலக்கை அடைவோம்.
புதிய வகை விமானங்கள், போர்க் கருவிகள் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும். பலம் வாய்ந்த நாடுகளில் நமது நாட்டிற்கும் தனித்தன்மை ஏற்படும். மழையின் அளவு ஓரளவு இருக்கும். ஆறு, குளம், கண்மாய், அணைகள் நிரம்பும். விவசாயம் செழிக்கும். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளில் விலை ஏறும். உணவு உற்பத்தி அதிகரிப்பதுடன் ஏற்றுமதி வளம் பெறும்.
கல்வித்துறையில் சீர்திருத்தம் ஏற்படும். கல்வியின் தரம் மேம்படும். மாணவமணிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும். விளையாட்டில் நமது நாட்டினை சார்ந்தவர்கள் சாதனைகள் பெறுவார்கள். அமெரிக்கா, ரஷியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், இந்தோனேஷியாஆகிய நாடுகளில் பூமி அதிரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.