நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

செ.குளோரியான்

பாடல் - 7

‘பால துன்பங்கள், இன்பங்கள் படைத்தாய்,
பற்று இலார் பற்ற நின்றானே,
கால சக்கரத்தாய், கடல் இடம் கொண்ட
கடல்வண்ணா, கண்ணனே’ என்னும்,
‘சேல்கொள் தண் புனல்சூழ் திருவரங்கத்தாய்’
என்னும், ‘என் தீர்த்தனே’ என்னும்,
கோல மா மழைக்கண் பனி மல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே.

(தாய் சொல்கிறார்) என் மகள், மென்மையான கொழுந்தைப்போன்ற பெண், ’இடத்துக்கேற்ப இன்பங்கள், துன்பங்களைப் படைப்பவனே’ என்கிறாள், ‘உலகப்பற்றை விட்ட ஞானிகள் பற்றும்படி நிற்பவனே’ என்கிறாள், ‘எதிரிகளுக்கு யமனாகத் திகழும் சக்ராயுதத்தை ஏந்தியவனே’ என்கிறாள், ‘பாற்கடலிலே திருத்துயில் கொண்ட கடல்வண்ணனே’ என்கிறாள், ‘கண்ணனே’ என்கிறாள், ‘சேல் மீன்கள் நிறைந்த, குளிர்ந்த நீரால் சூழப்பட்ட திருவரங்கத்துப் பெருமானே’ என்கிறாள், ‘என் தூயவனே’ என்கிறாள், அழகிய, பெரிய கண்களிலிருந்து மழைபோல் நீர் வழிய நிற்கிறாள்.

***

பாடல் - 8

‘கொழுந்து வானவர்கட்கு’ என்னும், ‘குன்று ஏந்திக்
கோ நிரை காத்தவன்’ என்னும்,
அழும், தொழும், ஆவி அனல் வெவ் உயிர்க்கும்,
‘அஞ்சன வண்ணனே’ என்னும்,
எழுந்து மேல்நோக்கி இமைப்பு இலள் இருக்கும்,
‘எங்ஙனே நோக்குகேன்?’ என்னும்,
செழும்தடம் புனல்சூழ் திருவரங்கத்தாய்,
என்செய்கேன் என் திருமகட்கே?

(தாய் சொல்கிறார்) என் மகள், ‘வானவர்களுக்குக் கொழுந்தைப்போன்றவனே’ என்கிறாள், ‘குன்றை ஏந்திப் பசுக்கூட்டங்களைக் காத்தவனே’ என்கிறாள், அழுகிறாள், தொழுகிறாள், அனல்போல் பெருமூச்சு விடுகிறாள், ‘அஞ்சன(மை) வண்ணனே’ என்கிறாள், எழுந்து மேலே நோக்கி இமைக்காமல் பார்க்கிறாள், ‘உன்னை எப்படிக் காண்பேன்?’ என்கிறாள். செழுமையான, பெரிய நீராலே சூழப்பட்ட திருவரங்கத்துப் பெருமானே, என் திருமகளுக்கு நான் என்ன செய்வேன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT