நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 7, 8

செ.குளோரியான்


பாடல் - 7

கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு
                                         ஆள்அன்றி ஆவரோ?
வண்டு உண் மலர்த்தொங்கல் மார்க்கண்டேயனுக்கு
                                        வாழு நாள்
இண்டைச் சடைமுடி ஈசன் உடன் கொண்டு
                                       உசாச்செல்லக்
கொண்டு அங்கு தன்னொடும் கொண்டு உடன்
                                     சென்றது உணர்ந்துமே.

வண்டுகள் மொய்க்கிற மலர் மாலையை அணிந்தவன் மார்க்கண்டேயன். அவனுக்கு வாழ்நாளை அளிப்பதற்காக, சடைமுடியிலே மாலையணிந்த ஈசன் அவனை அழைத்துக்கொண்டு, அவனோடு பேசியபடி எம்பெருமானிடம் சென்றான், உடனே, மார்க்கண்டேயனை எம்பெருமான் அழைத்துத் தன்னோடு சேர்த்துக்கொண்டு சிரஞ்சீவியாக்கினான், இதனை உணர்ந்து, கண்டு, தெளிந்து, கற்றவர்கள் கண்ணனுக்கு ஆட்படாமலிருப்பார்களா? (மாட்டார்கள். நிச்சயம் அவனுக்கே ஆட்படுவார்கள்.)

***

பாடல் - 8

செல்ல உணர்ந்தவர் செல்வன்தன்
                         சீர்அன்றிக் கற்பரோ?
எல்லை இலாத பெரும் தவத்தால் பல
                        செய் மிறை
அல்லல் அமரரைச் செய்யும் இரணியன்
                       ஆகத்தை
மல்லல் அரி உருவாய்ச் செய்த மாயம்
                      அறிந்துமே.

எல்லை இல்லாத பெரிய தவங்களைச் செய்தவன் இரணியன், அதனால் ஏற்பட்ட செருக்கின் காரணமாக, அமரர்களைத் தொடர்ந்த அல்லலுக்கு உட்படுத்தினான், ஆகவே, பெரிய நரசிம்ம உருவமாக வந்து அந்த இரணியனின் தேகத்தைப் பிளந்தார் எம்பெருமான், அந்த மாயத்தை அறிந்து, நன்கு உணர்ந்தவர்கள், அந்தச் செல்வனின் சிறப்பைத்தவிர வேறு சிறப்புகளைக் கற்பார்களா? (மாட்டார்கள். அவனுடைய சிறப்பைமட்டுமே கற்பார்கள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குந்தவை நாச்சியாா் கல்லூரியில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

SCROLL FOR NEXT