தினம் ஒரு தேவாரம்

111. பூங்கொடி மடவாள் - பாடல் 10

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 10:

    தெள்ளியர் அல்லாத் தேரரோடு அமணர் தடுக்கொடு சீவரம் உடுக்கும்
    கள்ளமார் மனத்துக் கலதிகட்கு அருளாக் கடவுளார் உறைவிடம் வினவில்  
    நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலம் திகழ் மூன்று எரி ஓம்பும்
    ஒள்ளியார் வாழும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

விளக்கம்:

தெள்ளியர்=தெளிந்த அறிவினை உடையவர்கள்; தேரர்=புத்தர்கள்; சீவரம்=துவராடை, காவி நிறத்துடன் இருக்கும் ஆடை; கலதி=கீழ்மகன். கலதி என்ற சொல் நமக்கு திருவாசகப் பாடல் ஒன்றினை உணர்த்துகின்றது. தனது எண்ணங்களை விருப்பங்களை தும்பி மூலம் பெருமானுக்கு உணர்த்துவதாக அமைந்த பாடல்கள் உடைய பதிகம் திருக்கோத்தும்பீ. தனது அருளினை வாரி வழங்கும் வள்ளலாகிய பெருமான், அடிகளாரின் சிறுமைகளை பொருட்படுத்தாமல் அவரது மனதினில் புகுந்து தங்கியதாக அடிகளார் கூறுகின்றார். அவ்வாறு தனது மனதினில் புகுந்த பெருமான், வெளியே போவதை ஒழித்து நிலையாக தங்கியதாகவும் கூறுகின்றார். அத்தகைய பெருமானிடம் தனது சார்பாக தூது செல்ல வேண்டும் என்று தும்பியை வேண்டும் அடிகளார், தூதுச் செய்தியும் உணர்த்துகின்றார். பெருமானது திருவடிகளில் தனது உள்ளத்து துயரை எல்லாம் முற்றிலும் துடைக்க வேண்டும் என்ற தனது விண்ணப்பத்தை தெரிவிக்குமாறு வேண்டுகின்றார்.

    கள்வன் கடியன் கலதி இவன் என்னாதே
    வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
    உள்ளத்து உறு துயர் ஒன்று ஓழியா வண்ணம் எல்லாம்
    தெள்ளும் கழுலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ  

பொழிப்புரை:

தெளிந்த அறிவில்லாதவர்களும் காவி ஆடையினைத் தங்களது உடல் மீது போர்த்துக் கொள்ளுபவர்களும் ஆகிய புத்தர்கள் மற்றும் பாயாக பயன்படும் முரட்டுத் தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள மனத்தினை உடைய கீழ் மக்களுக்கு அருள் புரியாத கடவுளார் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; காலை மாலை நள்ளிருள் ஆகிய மூன்று காலங்களுக்கும் ஏற்றவாறு வேதங்களில் உணர்த்தப்படும் கீதங்கள் ஓதி இறைவனை வழிபட்டு நலம் தரும் மூன்று எரிகளை வளர்த்து பாதுகாக்கும் அறிவொளி வீசும் அந்தணர்கள் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT