தினம் ஒரு தேவாரம்

140. குரவம் கமழ் நறுமென் - பாடல் 9

என். வெங்கடேஸ்வரன்

பாடல் 9:

    வளம் பட்டு அலர் மேல் அயன் மாலும் ஒரு வகையால்
    அளம் பட்டு அறிவொண்ணா வகை அழலாகிய அண்ணல்
    உளம் பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஒரு உருவம்
    விளம் பட்டு அருள் செய்தான் இடம் விரிநீர் வியலூரே

விளக்கம்:

அளம் படுதல்=வருந்துதல்; விளம்பட்டு=வெளிப்பட்டு தோன்றி; வளம் பட்டு அலர்=செழிப்பாக வளர்ந்து மலர்ந்த; ஒரு வகையால்=ஒரு வகையாகிய உடன்பாட்டினால், தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் எவர் காண்கின்றனரோ அவரே தங்களில் உயர்ந்தவர் என்ற உடன்பாட்டுடன், இருவரும் அடியையும் முடியையும் காணும் முயற்சியில் ஈடுபட்டமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. ஒரு வகையால் என்று சொல் இருவரும் வேறு வேறு  வழிகளில் தங்களது முயற்சியில் ஈடுபட்டனர் என்பதை குறிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர். பிரமன் அன்னமாக உயரப் பறந்தும் திருமால் பன்றியாக கீழே தோண்டிய, மாறுபட்ட இருவேறு முயற்சிகள் என்றும் பொருள் கொள்ளலாம். விள்ளப்பட்டு என்ற சொல் எதுகை நோக்கி விளம்பட்டு என்று திரிந்ததாக கொண்டு பிரமன் திருமால் ஆகிய இருவரும் செருக்கு விள்ளப்பட்டது என்றும் விளக்கம் அளிக்கப்படுகின்றது.        

பொழிப்புரை:

செழித்து வளர்ந்து மலர்ந்த தாமரை மேல் உறையும் பிரமனும் திருமாலும் தங்களில் இருவரில் யார் பெரியவன் என்று தொடர்ந்து செய்து கொண்டிருந்த வாதத்தினை ஒரு வகையாக முடிக்கும் பொருட்டு தங்களின் எதிரே தோன்றிய தீப்பிழம்பின் அடியையும் முடியையும் காண்பவரே தங்களில் உயர்ந்தவர் என்ற உடன்பாட்டுடன், அன்னமாகவும் பன்றியாகவும் மாறி தங்களது முயற்சியில் ஈடுபட்டனர். தங்களை வருத்திக் கொண்டு கடுமையான முயற்சியில் அவர்கள் இருவரும் ஈடுபட்ட போதும் வெற்றி காண முடியாமல் வருந்தும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற அண்ணல், செருக்கு நீங்கிய மனத்தராக இருவரும் வழிபாட்டு இறைஞ்சிய போது, அந்த தழல் தூணின் நடுவே இலிங்கமாக வெளிப்பட்டு அருள் புரிந்தார். அத்தகைய இறைவன் உறையும் இடம்,  நீர்வளம் வாய்ந்த வியலூர் தலமாகும்.        
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT