உலகத் தமிழர்

சிங்கப்பூரில் 'பாவேந்தர் 127 - சுழலும் சொற்போர்'

DIN

2017 ஆம் ஆண்டு தமிழ் மொழி மாத விழாவையொட்டி இலக்கியக் களம் ஏப்ரல் 29ம் தேதி காலை சிங்கப்பூரில் 'பாவேந்தர் 127  சுழலும் சொற்போர்' என்னும் இலக்கிய நிகழ்ச்சியைப் படைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் வள்ளல் போப்ராஜ் என்னும் நாகை தங்கராசு தலைமை தாங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தினகரன் சிறப்புரை நல்கினார். வளர் தமிழ் இயக்கத் தலைவர் ஆர்.ராஜாராம் விழாவில் பங்கேற்றவர்களைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

இலக்கியா மதியழகனின் கிதார் ஓசையுடனான தமிழ் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. மீனலோச்சனியின் வண்மைசேர் என்னும் பாவேந்தர் பாட்டுக்கான நடனம் அனைவரையும் கவர்ந்தது. சௌந்தர நாயகி வைரவன் தமிழுக்கும் அமுதென்று பேர் என்னும் பாவேந்தரின் இசைப்பாடலைப் பாடினார்.

பாவேந்தனின் 'பாண்டியன் பரிசு' காப்பியத்தில் விஞ்சி நின்று நம் நெஞ்சை ஈர்ப்பது பாத்திரப்படைப்பே என்று கண்ணன் சேஷாத்ரி அவர்களும் சமூகச்சிந்தனையே என்று கவிஞர் சு.உஷா அவர்களும் காவிய அமைப்பே என்று மன்னை முனைவர் ராஜகோபாலன் அவர்களும் 'சுழலும் சொற்போரின்' பொருள் உணர்ந்து வாதிட்டனர். சுழலும் சொற்போரின் நெறியாளராக இருந்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நெறிப்படுத்திச் சென்றவர் ஈரோடு மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரனின் அன்பு மகன் எஸ். அரவிந்த பாரதி அவர்கள்.

கவிஞர் தஞ்சை கூத்தரசன், தமிழ் இலக்கியங்களில் தம்மைக் கவர்ந்த கம்பனையும், திரிகூடராசப்பரையும் அடிக்கோடிட்டுக் காட்டித் தம் பேச்சுரையில் புகழ்ந்தார்.

இவ்வாண்டிற்கான 'பாரதிதாசன் விருது' சிங்கப்பூரின் தமிழ்க்கவிஞரும் மூத்த கவிஞருமான பாத்தேறல் இளமாறன் அவர்களுக்கு இலக்கியக்களத்தால் அளிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டது. இலக்கியக்களம் வெளியிட்ட பாவேந்தர் - 127 மலரின் முதல் பிரதியை, பெரியார் சேவை மன்றத்தின் தலைவர் கலைச்செல்வம் பெற்றுக்கொண்டார்.

இலக்கியக் களத்தின் தலைவர் முனைவர் இரத்தின வேங்கடேசன் விழாவிற்கு வந்திருந்தோர்களை வரவேற்க, அபிராமி கண்ணன் விழாவினை நெறிபடுத்திச் செல்ல விழா இனிதே முடிவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT