தில்லி டெஸ்ட்: ரஹானே மீண்டும் சதம்: தெ.ஆ. வெற்றி பெற 481 ரன்கள் இலக்கு
தில்லியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரஹானே இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார்.
தில்லியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரஹானே இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். வெற்றிக்கு 481 ரன்கள் இலக்கு என்ற நிலையில் நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 117.5 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி, 49.3 ஓவர்களில் 121 ரன்களுக்குச் சுருண்டது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் கோலி 83 ரன்களுடனம், ரஹானே 52 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கிய நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 88 ரன்களில் அபாட் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து எதிர்முனையில் பொறுமையாக விளையாடி வந்த ரஹானே அதிரடி காட்ட தொடங்கினார். முதல் இன்னிங்ஸிலும் சதம் அடித்திருந்த அவர் ரஹானே இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். ரஹானே சரியாக 100 ரன்கள் (8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்திருந்த நிலையில் கேப்டன் கோலி டிக்ளர் செய்வதாக அறிவித்தார். அப்போது இந்திய அணி 100.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றி பெற 481 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் எலிகர் அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்த வந்து கேப்டன் ஆம்லாவும் பௌமாவும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஜோடி 38.4 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகப் பொறுமையாக 117 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பௌமா அஸ்வின் பந்துவீச்சில் போல்டானார்.
பின்னர் களம் இறங்கிய டிவில்லியர்ஸும் இந்திய பவுலர்களை கடுமையாக சோதித்தார். அவர் தான் சந்தித்த 33-வது பந்தில்தான் முதல் ரன்னே எடுத்தார். ஆட்ட நேர இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 72 ஓவர்களில், 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ஆம்லா 207 பந்துகளை சந்தித்து 23 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 91 பந்துகளை சந்தித்து 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். எட்டு விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 409 ரன்கள் எடுக்க வேண்டும்.