பரபரப்பான இறுதி ஆட்டத்தை வென்று உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி: ஹைலைட்ஸ் விடியோ!
2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து...
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை வென்று இங்கிலாந்து சாதனை படைத்தது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது. இதன் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று ஏமாற்றமடைந்தது நியூஸிலாந்து.
98 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.