முகப்பு
கிரிக்கெட் உலகக் கோப்பை-2019

அடுத்த ஆட்டத்தில் எனக்கு இடம் கிடைக்குமா?: பேட்டிங்கில் சாதித்த ஆஸி. வீரர் நாதன் கோல்டர் நைல் சந்தேகம்!

கடந்த இரு ஆட்டங்களிலும் என்னுடைய பந்துவீச்சில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 70 ரன்கள் கொடுத்துள்ளேன்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:09 AM
பகிர்:

மேற்கிந்தியத் தீவுகள் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா. அதன் வெற்றியில் மிட்செல் ஸ்டார்க், நாதன் கோல்டர் நைல் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். 

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரென்ட்பிரிட்ஜில் நடைபெற்றது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 49 ஓவர்களில் 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. ஆல்ரவுண்டரான நாதன் நைல் 4 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 92 ரன்களை விளாசினார். முன்னாள் கேப்டனான ஸ்மித் நிதானமாக ஆடி 73 ரன்களுடன் அரை சதத்தைப் பதிவு செய்தார். ஆஸ்திரேயாவின் அற்புதமான பந்துவீச்சில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது மே.இ. அணி. ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் அற்புதமாகப் பந்துவீசி 46 ரன்களை மட்டுமே தந்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில் 8-ம் நிலை பேட்ஸ்மேனாக ஆடி அதிகபட்ச ஸ்கோர் (92) அடித்த சாதனையை நிகழ்த்தினார் நாதன் கோல்டர் நைல். மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 8-ம் நிலை பேட்ஸ்மேன் என்கிற பெருமையையும் அவர் அடைந்துள்ளார்.

எனினும் இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் தான் விளையாடுவது சந்தேகமே என்கிறார் நாதன் கோல்டர் நைல். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

கடந்த இரு ஆட்டங்களிலும் என்னுடைய பந்துவீச்சில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 70 ரன்கள் கொடுத்துள்ளேன். அதனால் அணியில் என்னுடைய இடம் பாதுகாப்பாக இல்லை. எங்கள் அணியில், வெளியே இரு உலகத் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். அணியில் ரன்கள் எடுப்பதற்காக நான் இல்லை. அதை மேல்வரிசை வீரர்கள் பார்த்துக்கொள்வார்கள். எனவே அடுத்த ஆட்டத்தில் என்னை நீக்கினால் ஆச்சர்யப்பட மாட்டேன். விக்கெட் எடுப்பதற்காகவே அணியில் நான் உள்ளேன். விக்கெட் எதுவுமின்றி இரு ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். எனவே அடுத்த ஆட்டத்தில் என்னுடைய இடம் குறித்து இனிமேல் தான் தெரியவரும்.

அணியில் உள்ள போட்டி மனப்பான்மையை நான் வரவேற்கிறேன். அது இல்லாவிட்டால் நன்றாக இருக்காது. நம் திறமையை முழுமையாக வெளிப்படுத்த பின்னாலிருந்து ஒருவர் அழுத்தம் தரவேண்டும். எனவே இந்தப் போட்டியை நான் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியில் ஜேசன் பெஹ்ரென்டார்ஃப், கேன் ரிச்சர்ட்சன் ஆகிய இரு வீரர்களும் உள்ளார்கள். இவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.