இங்கிலாந்து அபார பந்துவீச்சு: 232 ரன்கள் எடுத்த இலங்கை அணி!
மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்....
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் லீட்ஸில் இன்று தொடங்கியுள்ளது.
டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இலங்கை அணியில் கஹிரு, மிலிந்தா இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் அடில், மொயீன் இடம்பெற்றுள்ளார்கள்.
புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-ம் இடத்திலும் 4 புள்ளிகளுடன் இலங்கை அணி 6-ம் இடத்தில் உள்ளன.
2-வது ஓவரில் இலங்கை கேப்டன் கருணாரத்னேவை 1 ரன்னில் வீழ்த்தினார் ஆர்ச்சர். அடுத்த ஓவரின் முதல் பந்தில் பெரேரா 2 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் அலட்சியமான ஷாட்டினால் மொயீன் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு 21 வயது அவிஷ்கா ஃபெர்ணாடோ களமிறங்கி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
ஆர்ச்சர் வீசிய ஆறாவது ஓவரில் ஒரு சிக்ஸரும் இரண்டு பவுண்டரிகளும் அடித்து ஆச்சர்யப்படுத்தினார் அவிஷ்கா. இதன்பிறகு அற்புதமான ஷாட்கள் மூலம் பவுண்டரிகள் அடித்து இலங்கை அணியின் ஸ்கோரை உயர்த்தினார். சிறிது நேரம் இலங்கை அணி ரசிகர்களை மகிழ்வித்த அவிஷ்கா, 49 ரன்களில் வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு இலங்கை பேட்ஸ்மேன்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடித்தார்கள். 29 ஓவரின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் என்கிற நிலைமையில் இருந்தது இலங்கை அணி. எனினும் அடுத்த ஓவரில் மீண்டும் அசத்தியது இங்கிலாந்து அணி.
46 பந்துகளில் குசால் மெண்டிஸை வீழ்த்திய ரஷித், அடுத்தப் பந்தில் ஜீவன் மெண்டிஸை டக் அவுட் செய்தார். இதனால் மீண்டும் தற்காப்பு ஆட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலைமைக்குச் சென்றது இலங்கை அணி.
38 ஓவர்கள் வரை, 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது இலங்கை அணி. 47 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த டீ சில்வா, ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் மீண்டும் சரிவை எதிர்கொண்டது இலங்கை அணி. பெரேரா 2 ரன்களிலும் உதானா 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். வுட் பந்துவீச்சில் 1 ரன்னில் வெளியேறினார் மலிங்கா. மறுமுனையில் விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருக்க, நிதானமாக விளையாடி இலங்கை அணிக்கு ஓரளவு கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்தார் மேத்யூஸ்.
இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 85 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணித் தரப்பில் வுட், ஆர்ச்சர் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள்.