தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியுள்ளது.
தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 22 பந்துகளில் அதிரடியாக 41 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ரோவ்மன் பௌவல் 35 ரன்களும், செர்ஃபேன் ரூதர்ஃபோர்டு 29 ரன்களும் எடுத்தனர்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் லிஸாத் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பாட்டிக் க்ரூகர் 2 விக்கெட்டுகளையும், ஓட்னில் பார்ட்மேன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 19.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 30 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக ரீஸாஹென்ரிக்ஸ் அதிரடியாக 18 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிகபட்சமாக 28 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஷமர் ஜோசப் மற்றும் ரோமாரியோ ஷெப்பர்டு தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபோர்டு மற்றும் குடகேஷ் மோட்டி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஆகஸ்ட் 27) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.