இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக நாளை (ஜூலை 22) இலங்கைக்கு புறப்படவுள்ளது.
இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி ஜூலை 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இலங்கைக்கு எதிரான இந்த தொடரில் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டொஸ்சாட் உதவிப் பயிற்சியாளர்களாக செயல்படுவார்கள் எனத் தெரிகிறது. இருப்பினும், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டொஸ்சாட் இருவரும் கௌதம் கம்பீருடன் இணைந்து பணியாற்றியுள்ளதால், அவர்கள் இருவரும் இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணியுடன் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இருந்தபோது, அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட திலீப்பே தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்களான வினய் குமார் மற்றும் லக்ஷ்மிபதி பாலாஜி அல்லது தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மோர்னே மோர்க்கலை நியமிக்க வேண்டும் என பிசிசியையிடம் கௌதம் கம்பீர் வேண்டுகோள் வைத்துள்ளார். இருப்பினும், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு எதுவும் பிசிசிஐ தரப்பில் வெளியிடப்படவில்லை.
இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுகின்றனர். இரண்டு தொடர்களுக்குமே ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் துணைக் கேப்டனாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா டி20 தொடருக்கான அணியில் ஒரு வீரராக மட்டுமே களம் காண்கிறார். அவருக்கு கேப்டன் அல்லது துணைக் கேப்டன் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை. இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் இது தொடர்பாக கண்டிப்பாக கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.