முடிவுகள் எப்படி வந்தாலும் அடுத்து இந்திய அணி விளையாடவுள்ள 7 டி20 போட்டிகளிலும் நீங்கள்தான் தொடக்க ஆட்டக்காரர் என சூர்யகுமார் கூறியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று (நவம்பர் 8) டர்பனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 50 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இந்தியா தயாரா? இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள் என்ன?
ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்
நேற்றையப் போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய நிலையில், இந்திய அணி விளையாடவுள்ள அடுத்த 7 டி20 போட்டிகளில் முடிவுகள் எப்படி வந்தாலும், தன்னை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப் போவதாக சூர்யகுமார் யாதவ் கூறியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் கூறியதாவது: துலிப் கோப்பை தொடரில் விளையாடியபோது, சூர்யகுமார் யாதவ் என்னிடம், உங்களுக்கு அடுத்து 7 போட்டிகள் இருக்கின்றன. அந்த 7 போட்டிகளிலும் நீங்கள்தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போகிறீர்கள். என்ன ஆனாலும் உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன் என்றார். எனது கிரிக்கெட் பயணத்தில் எனக்கு முதல் முறையாக நன்றாக தெளிவு கிடைத்தது. அவரது அந்த வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையளித்தது. நான் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட வேண்டும் என்பதில் அணி நிர்வாகமும் தெளிவாக இருந்தது.
எனது நாட்டுக்காக எந்த விதத்தில் என்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கலாம் என்பதில் மட்டுமே நான் தற்போது கவனம் செலுத்த வேண்டும். நான் சிறப்பாக செயல்பட்டதற்கு பின்னால் நிறைய கடின உழைப்பு இருக்கிறது. கடந்த 9-10 ஆண்டு கால காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது. தற்போது நடக்கும் விஷயங்களை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
முதல் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.