தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி செயிண்ட் ஜியார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று (நவம்பர் 10) நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இதையும் படிக்க: பார்டர் - கவாஸ்கர் தொடரில் தோற்றால் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கௌதம் கம்பீர் நீக்கப்படுவாரா?
இந்தியா - 124/6
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. சஞ்சு சாம்சன் (0 ரன்), அபிஷேக் சர்மா (4 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து, திலக் வர்மா மற்றும் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. இருப்பினும், திலக் வர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.அதன் பின், அக்ஷர் படேல் மற்றும் ஹார்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தது. இருப்பினும், அக்ஷர் படேல் 27 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரிங்கு சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்துள்ளது. ஹார்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்கள் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஸீ, ஆண்டைல் சைம்லேன், அய்டன் மார்க்ரம் மற்றும் பீட்டர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.