கோப்பையுடன் போஸ் கொடுக்கும் பாகிஸ்தான் வீரர்கள் படம் | பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
கிரிக்கெட்

22 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆஸி.க்கு எதிராக தொடரை கைப்பற்றி பாகிஸ்தான் அபாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி பாகிஸ்தான் அபாரம்.

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்றது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

140 ரன்களில் ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று (நவம்பர் 10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது.

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 31.5 ஓவர்களில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் அப்பாட் 30 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, மேத்யூ ஷார்ட் 22 ரன்களும், ஆடம் ஸாம்பா 13 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் ஷா அஃப்ரிடி மற்றும் நஷீம் ஷா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹாரிஸ் ரௌஃப் இரண்டு விக்கெட்டினையும், ஹாஸ்னைன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு...

ஆஸ்திரேலிய அணி 140 ரன்களில் ஆட்டமிழக்க, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பாகிஸ்தானுக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். அப்துல்லா ஷஃபீக் 37 ரன்கள் எடுத்தும், சயீம் ஆயுப் 42 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெறச் செய்தனர். கேப்டன் முகமது ரிஸ்வான் 30 ரன்களுடனும், பாபர் அசாம் 28 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் லான்ஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை வென்றிருந்தது.

பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட ஹாரிஸ் ரௌஃப் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுவை மத்திய பல்கலை. முன் மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் ஆக. 31-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்

மாசு கலந்த குடிநீா் விநியோகம்: பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்

தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்

SCROLL FOR NEXT