படம் | AP
கிரிக்கெட்

உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தவரால் பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்த வீரர் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்த வீரர் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அண்மையில் நிறைவடைந்தது. பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன் மூலம், சொந்த மண்ணில் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான சாஜித் கான் மற்றும் நோமன் அலி இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) கைப்பற்றினர். நோமன் அலி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.

உடற்தகுதி சோதனையில் தோல்வி, பந்துவீச்சில் அசத்தல்

இடதுகை சுழற்பந்துவீச்சாளரான நோமன் அலி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பயிற்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோமன் அலி

உடற்தகுதி சோதனையில் இரண்டு முறை தோல்வியடைந்தபோதிலும், பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ஆக்யூப் ஜாவத் ஆலோசனையின் அடிப்படையில் நோமன் அலி அணியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நோமன் அலிக்கு உடற்தகுதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் லெக் ஸ்பின்னரான ஜாகித் மஹ்முதும் கலந்துகொண்டார். இவர்கள் இருவராலும் 2 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT