வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தத் தொடரில் முதலாவது போட்டி வங்கதேசத்தின் மிா்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்ய களமிறங்கிய பேட்டா்கள், தென்னாப்பிரிக்காவின் அபார பௌலிங்கை எதிா்கொள்ள முடியாமல் திணறினா்.
40.1 ஓவா்களிலேயே 106 ரன்களுக்கு வங்கதேசம் ஆல் அவுட்டானது. அந்த அணியில் தொடக்க பேட்டா் மஹ்முதுல் ஹாஸன் மட்டுமே 30 ரன்களை சோ்த்தாா்.
மற்ற வீரா்கள் வந்த வேகத்திலேயே சொற்ப ரன்களுடன் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டினர். பௌலிங்கில் தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா, வியான் முல்டா், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியும் வங்கதேசத்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது.
வங்கதேச பௌலா் டைஜுல் இஸ்லாமின் அற்புத பௌலிங்கை சமாளிக்க முடியாமல் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 41 ஓவா்களில் 140/6 ரன்களை எடுத்திருந்தது. அதிகபட்சமாக டோனி சோர்ஸி 30, ஸ்டப்ஸ் 23, ரிக்கல்டன் 27 ரன்களை எடுத்தனா்.
வியான் முல்டா் 17, கைல் வெரெய்ன் 18 ரன்களுடன் களத்தில் இருந்தனா். வங்கதேச பௌலா் டைஜுல் இஸ்லாம் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
பின்னர் 34 ரன்கள் முன்னிலையுடன் 2 வது நாளைத் தொடங்கிய கைல் வெரெய்ன் மற்றும் வியான் முல்டர் இருவரும் துரிதமாக ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அபாரமாக விளையாடிய கைல் வெரெய்ன் தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். மேலும், வங்கதேச மண்ணில் சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் கைல் வெரெய்ன். அதே போல வியான் முல்டரும் தனது முதல் அரைசதத்தை நிறைவுசெய்தார்.
கைல் வெரெய்ன் 114 ரன்களுடனும்(2 சிக்ஸர், 8 பவுண்டரி), வியான் முல்டர் 54 ரன்களுடனும்(8 பவுண்டரி) பெவிலியன் திரும்ப அவருக்குப் பின் வந்த டேன் பைட் 32 ரன்கள் எடுத்து வீழ்ந்தார்.
கைல் வெரெய்ன் - வியான் முல்டர் இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர்.
88.4 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்கள் சேர்த்தது. வங்கதேசத் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகளும், ஹசன் மஹமுட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 202 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.