இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம் என வங்கதேச அணியின் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவை வீழ்த்துவது கடினம்
சொந்த மண்ணில் இந்தியா மிகவும் வலுவாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது மிகவும் கடினம் என வங்கதேச அணியின் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மற்ற நாடுகளில் இந்திய அணி விளையாடுவதைப் பாருங்கள். அவர்கள் தொடர்களில் ஒரு போட்டியில் அல்லது இரண்டு போட்டிகளில் தோல்வியடைவார்கள். ஆனால், இந்தியாவில் அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைவதை பார்ப்பது மிகவும் அரிது. வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல, டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றிக்கு மிக அருகில் சென்றோம்.
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக இதுவரை நாங்கள் வெற்றி பெற்றதில்லை. இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கான தேடலில் நாங்கள் உள்ளோம். நாளை எங்களுக்கு மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. ஆடுகளங்கள் நன்றாக இருந்தது. ஆட்டம் மூன்றரை நாள்களில் முடிக்கப்படுவது சிறப்பானதாக இல்லை என்றார்.
அசைக்க முடியாத இந்திய அணி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி அசைக்க முடியாத அணியாக முதலிடத்தில் உள்ளது. அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். கிட்டத்தட்ட 4000 நாள்களாக இந்திய அணி அதன் சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்கவில்லை. அவர்கள் சொந்த மண்ணில் அந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர். வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படுகிறது.
கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக டாக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 12 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.