சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே நிஷான் பெய்ரிஸ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அறிமுகப் போட்டியில் அசத்தல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம் இலங்கை சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான நிஷான் பெய்ரிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நிஷான் பெய்ரிஸ் அவரது அறிமுகப் போட்டியிலேயே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார்.
27 வயதாகும் நிஷான் பெய்ரிஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் முக்கிய நியூசிலாந்து வீரர்களான டாம் லாதம், கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா, டாம் பிளண்டெல், கிளன் பிளிப்ஸ் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். டெஸ்ட்டில் அறிமுகப் போட்டியிலேயே தனது முதல் 5 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றினார்.
இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளரான விஸ்வா ஃபெர்னாண்டோ காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட்டிலிருந்து விலகியதையடுத்து, வலதுகை சுழற்பந்துவீச்சாளரான நிஷான் பெய்ரிஸ் அணியில் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.