முகப்பு
கிரிக்கெட்

ஓவல் டெஸ்ட்: வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்; 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட், 2025 at 4:16 PM
- படம் | AP
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சாய் சுதர்சன் 38 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 26 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

வேகப் பந்துவீச்சாளர்கள் அசத்தல்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஸாக் கிராலி மற்றும் பென் டக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், பென் டக்கெட் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸாக் கிராலி 57 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும். அதன் பின், ஆலி போப் 22 ரன்களும், ஜோ ரூட் 29 ரன்களும் எடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

அதன் பின், ஜேக்கோப் பெத்தேல் (6 ரன்கள்), ஜேமி ஸ்மித் (8 ரன்கள்), ஜேமி ஓவர்டான் (0 ரன்), கஸ் அட்கின்சன் (11 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

ஓவலில் மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹாரி ப்ரூக் 48 ரன்களுடனும், ஜோஷ் டங் 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 18 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

In the last Test match against India, England scored 242 runs in the first innings for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.