அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வங்கதேசம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி சட்டோகிராமில் இன்று (டிசம்பர் 2) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் கேப்டன் பால் ஸ்டிரிலிங் அதிகபட்சமாக 27 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
அவரைத் தொடர்ந்து, டாக்ரெல் 19 ரன்களும், டிம் டெக்டார் 17 ரன்களும் எடுத்தனர். கேரத் டெலானி 10 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
வங்கதேசம் தரப்பில் முஷ்தபிசூர் ரஹ்மான் மற்றும் ரிஷாத் ஹொசைன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், மஹேதி ஹாசன் மற்றும் சாய்ஃபுதீன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 13.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹாசன் 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பர்வேஷ் ஹொசைன் இமோன் 33 ரன்களும், சைஃப் ஹாசன் 19 ரன்களும் எடுத்தனர்.
அயர்லாந்து தரப்பில் கிரைக் யங் மற்றும் ஹாரி டெக்டார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தன்சித் ஹாசன் ஆட்ட நாயகனாகவும், மஹேதி ஹாசன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.