ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தனிநபர் சதம் அடிக்கப்படாத நிலையிலும் ஆஸ்திரேலிய அணி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 511 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜேக் வெதரால்டு (72 ரன்கள்), மார்னஸ் லபுஷேன் (65 ரன்கள்), ஸ்டீவ் ஸ்மித் (61 ரன்கள்), அலெக்ஸ் கேரி (63 ரன்கள்) மற்றும் மிட்செல் ஸ்டார்க் (77 ரன்கள்) அரைசதம் கடந்து அசத்தினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 177 ரன்கள் முன்னிலை பெற்றது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் எந்த ஒரு வீரரும் சதம் விளாசவில்லை. இருப்பினும், அந்த அணி 511 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிநபர் சதம் அடிக்காமல் 5-வது அதிகபட்ச ஸ்கோரை குவித்த அணி என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது.
இதற்கு முன்பாக கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரானப் போட்டியில் இலங்கை அணி தனிநபர் சதம் அடிக்காமல் அதிக ரன்கள் குவித்து இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. தனிநபர் சதம் அடிக்காமல் வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் 531 ரன்கள் எடுத்தது.
இந்த வரிசையில் இந்திய அணி (524 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக) இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (520 ரன்கள், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக), நான்காவது இடத்தில் தென்னாப்பிரிக்காவும் (517 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) உள்ளன.
இதையும் படிக்க: முதல் டி20 போட்டியில் இந்திய அணியுடன் இணையும் ஷுப்மன் கில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.