ஐபிஎல் மினி ஏலம் : பிகார் எம்பியின் மகனும் தில்லி வீரருமான சர்தக் ரஞ்சனை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தன.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை கொல்கத்தா அணி அதிகபட்ச தொகையான ரூ.25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. மற்ற அணிகளைவிட அதிகபட்சத் தொகையுடன் ஏலத்தில் களமிறங்கிய கொல்கத்தா அணி, இந்த ஏலத்தில் மொத்தமாக 13 பேரை எடுத்தது.
அதில், மதீஷா பத்திரனா (18 கோடி), முஸ்தாபிசுர் ரஹ்மான் (9.20 கோடி), தேஜஸ்வி சிங் (3 கோடி), ஃபின் ஆலன் (2 கோடி), டிம் ஷெய்ஃப்ர்ட் (1.50 கோடி), ராகுல் திரிபாதி (75 லட்சம்) , தக்ஷா கம்ரா (30 லட்சம்), சர்தக் ரஞ்சன்(30 லட்சம்), கார்த்திக் தியாகி ( 30 லட்சம்), பிரசாந்த் சோலங்கி (30 லட்சம்), ஆகாஷ்தீப் (1 கோடி), ரச்சின் ரவீந்திரா (2 கோடி) ஆகியோரையும் ஏலத்தில் எடுத்தது.
இதில், ரூ. 30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சர்தக் ரஞ்சன், பிகாரின் பூர்ணியா எம்பியும், காங்கிர்ஸ் மூத்த தலைவருமான பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சனின் மகன்.
உள்நாட்டுப் போட்டிகளில் தில்லி அணிக்காக விளையாடி வரும் சர்தக் ரஞ்சன், இரண்டு முதல் தரப் போட்டிகள், 4 லிஸ்ட் ஏ போட்டிகள், 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இதுதொடர்பாக பப்பு யாதவ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வாழ்த்துகள், மகனே! உன் திறமையால் உனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கு. உன் ஆசைகளை நிறைவேற்று! இனி சர்தக் என்ற பெயரில் எங்கள் அடையாளம் உருவாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.