இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் தொடரினை இழந்ததுக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியர்கள் இங்கிலாந்தைப் பார்த்து சிரிக்கிறார்கள் எனக் கூறியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.
0-18 தோல்விகண்டுள்ள இங்கிலாந்து
அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. தொடரையும் 3-0 என வென்றது.
ஆஸ்திரேலியாவில் கடைசி 18 ஆஷஸ் போட்டிகளில் இங்கிலாந்து அணி 16 போட்டிகள் தோல்வியுற்றுள்ளது. மீதம் 2 போட்டிகளும் மழையினால் டிரா ஆனதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் ஆஷஸ் கோப்பையை இழந்ததுக்கு பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
முன்னாள் வீரரும் கேப்டனுமான மைக்கேல் வாகன் இது குறித்து தி டெலிகிராப்பில் எழுதியிருப்பதாவது:
இங்கிலாந்தின் ஆணவத்திற்கு மூடுவிழா...
இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தின் அணுகுமுறை மோசமான முறையில் அம்பலமாகியிருக்கிறது.
இந்தமாதிரியான தோல்விகளுக்குப் பிறகு, பலர் அணியிலிருந்து நீக்கப்படலாம் என்பதை அறிந்துகொள்ள நீங்கள் வரலாற்றில் நீண்டதூரம் பார்க்கத்தேவையில்லை. கடைசியில், 11 நாளில் ஆஸ்திரேலியாவில் தொடரை இழப்பது மிகவும் மோசமானது.
இங்கிலாந்தின் மூன்றாண்டுகளின் ஆணவம் (பேஸ்பால்) தற்போது மூடுவிழாவுக்கு வந்திருக்கிறது.
இந்தத் தொடர் அவர்களுக்கு பெருமிதம் கொள்ளாமல் இருக்க வைத்திருக்கும்.
சிரிக்கும் ஆஸ்திரேலியர்கள்...
ஆஸ்திரேலியர்கள் சிரிக்கிறார்கள். இந்த அணி எப்படி அவர்களுக்கு வலுவானதாக அமைந்தது என்பதை அவர்களே நம்பமாட்டார்கள்.
இந்தமாதிரியான அணுகுமுறைகள் ஆஸ்திரேலியாவில் வெல்லுமென இங்கிலாந்து நான்காண்டுகளாகக் கூறிவந்தார்கள். அது எப்போது வருமெனத் தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய ஒரு அணியை மட்டுமே பார்த்திருக்கிறேன்.
அந்த அணியிடம் கடுமையான முடிவுகள் எடுக்கம்படியும் பொறுமையாக ஆடி எதிரணியை சோர்விழக்கவும் பந்துவீச்சில் ஒழுக்கமும் இருந்தது. இது எதுவுமே நம்மிடம் இல்லை என்றார்.
மைக்கேல் வாகன் எந்த அணியைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் இந்தியாதான் ஆஸி.யை அதன் மண்ணில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.