ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அசைக்க முடியாத அணியாக இருந்தது. தோல்வியையே சந்திக்காமல் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதனால், இந்திய அணியின் உலகக் கோப்பை கனவு தகர்ந்தது.
இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஓய்வு பெற்றுவிடலாம் என நினைத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாஸ்டர்ஸ் யூனியன் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மிகுந்த கவலையாக இருந்தது. இனிமேல் கிரிக்கெட்டே விளையாட வேண்டாம் என நினைத்தேன். ஏனெனில், அந்த உலகக் கோப்பைத் தொடருக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்துவிட்டேன். என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றுமில்லாததைப் போன்று உணர்ந்தேன்.
அந்த உணர்விலிருந்து வெளிவர எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு மிகவும் பிடித்த, நேசிக்கும் கிரிக்கெட்டினை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டேன் என அடிக்கடி கூறிக் கொண்டேன். மெதுவாக இழந்த ஆற்றலை மீண்டும் பெற்று கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் அணியில் உள்ள அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தோம். இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியை என்னால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் அந்த தோல்வியிலிருந்து வெளிவருவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஏனெனில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்தேன். உலகக் கோப்பை தொடருக்கு 2-3 மாதங்களுக்கு முன்பாக தயாராக ஆரம்பிக்கவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதிலிருந்து இந்த உலகக் கோப்பைத் தொடருக்காக தயாரானேன்.
உலகக் கோப்பையை வெல்வதே என்னுடைய இலக்காக இருந்தது. அது டி20 உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி, ஒருநாள் உலகக் கோப்பையாக இருந்தாலும் சரி. அதனால், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது என்னை முற்றிலுமாக சோகத்தில் ஆழ்த்தியது. என்னுடைய உடலில் கொஞ்சம்கூட ஆற்றல் இல்லாததாக உணர்ந்தேன். அந்த தோல்வியிலிருந்து வெளிவர எனக்கு ஓரிரு மாதங்கள் தேவைப்பட்டன.
ஒரு விஷயத்தில் அதிகமாக முதலீடு செய்து, அதற்கான பலன் கிடைக்கவில்லையென்றால், மிகுந்த ஏமாற்றமடைவது இயல்பானது. மிகச் சரியாக கூறவேண்டுமென்றால், நானும் அந்த மனநிலையில்தான் இருந்தேன். ஆனால், வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடாது என எனக்குத் தெரியும். தோல்வியை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி எனக்கு மிகப் பெரிய பாடமாக அமைந்தது. மீண்டும் புத்துணர்ச்சியுடன் முதலில் இருந்து ஆரம்பித்தேன். 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் என்னுடைய முழு கவனத்தையும் செலுத்தினேன். இப்போது இதனைக் கூறுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த நேரத்தில் அது மிகவும் கடினமாக இருந்தது என்றார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.