லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16000 ரன்களைக் கடந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தில்லி மற்றும் ஆந்திர அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆந்திரம் முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஆந்திரம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, தில்லி அணிக்கு 299 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஹசாரே தொடரில் விளையாடியதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தில்லி அணி, 37.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 101 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிதீஷ் ராணா 77 ரன்களும், பிரியன்ஷ் ஆர்யா 74 ரன்களும் எடுத்தனர்.
அதிவேகமாக 16000 ரன்கள் குவித்து சாதனை
இன்றையப் போட்டியில் 131 ரன்கள் எடுத்தன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 16000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.
தனது 330-வது இன்னிங்ஸில் விராட் கோலி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்பாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 391 இன்னிங்ஸ்களில் 16000 ரன்களைக் கடந்திருந்ததே அதிவேகமானதாக இருந்தது. அந்த சாதனையை விராட் கோலி தற்போது முறியடித்துள்ளார்.
சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் விராட் கோலியை மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.