2025! சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நம்மைச் சிறுவயதில் இருந்தே மகிழ்வித்த விண்மீன்கள் பலரும் தங்கள் கள வாழ்க்கைக்கு முடிவுரை எழுதி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அந்த வகையில் யார் யார் ஓய்வு பெற்றது என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் சரியாக சோபிக்காத இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென மே 7 ஆம் தேதி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கடந்தாண்டு ஐசிசி டி20 தொடரில் கோப்பை வென்றதும் டி20 போட்டிகளில் இருந்து விடைபெற்ற 38 வயதான ரோஹித் சர்மா, டெஸ்ட்டுகளில் இருந்து ஓய்வுபெற்றார். இதுவரை 67 டெஸ்ட்டுகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4,301 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.
விராட் கோலி
கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், விராட் கோலி தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக மே 12 ஆம் தேதி டெஸ்ட்களில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பேட்டரான விராட் கோலி, சச்சினின் சாதனையான சர்வதேச போட்டியில் 100 சதங்களைக் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென டெஸ்ட்களில் இருந்து ஓய்வுபெற்றார்.
சிவப்புப் பந்து கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டன் என பெருமைக்குரிய 37 வயதான விராட் கோலி, 123 போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 7 இரட்டைச் சதங்களைப் பதிவு செய்துள்ளார். மேலும், டெஸ்ட்களில் 9,230 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட்களில் விரைவில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என்று இவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், ஓய்வை அறிவித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஸ்டீவ் ஸ்மித்
ஆஸ்திரேலிய அணியின் குறிப்பிடத்தக்க கேப்டன்களில் ஒருவரும், 'ஸ்மட்ஜ்' (Smudge) என அழைக்கப்படுபவருமான 35 வயதான ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மார்ச் 5 ஆம் தேதி திடீரென அறிவித்தார்.
முன்னணி வீரர்கள் கேப்டன் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட், மார்ஷ் ஆகியோர் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இதனால், கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஆஸ்திரேலிய அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், 12 சதங்கள், 35 அரை சதங்களுடன் 5,800 ரன்களைக் குவித்துள்ளார். லெக்ஸ்பின்னராக கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 கேட்ச்களையும் பிடித்துள்ளார். ஓடிஐ-களில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், டி20, டெஸ்ட்களில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன் நவம்பர் 2 ஆம் தேதி சர்வதேச டி20களில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
தேசிய அணிக்காக 93 டி20-ல் விளையாடியுள்ள அவர், அதில் 18 அரை சதங்களுடன் 2575 ரன்கள் குவித்துள்ளார். டி20 அணிக்கு கேப்டனாக 75-ல் செயல்பட்ட இவர் தலைமையில், நியூசிலாந்து அணி 3 முறை டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளது.
ஆண்ட்ரே ரஸல்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர்கள் பட்டாளத்தில் முதன்மையானவரான ஆண்ட்ரே ரஸல், ஜூலை 23 ஆம் தேதி அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். சமீபத்தில் ஐபிஎல் வாழ்க்கையும் முற்றுப்புள்ளி வைத்த அவர் கொல்கத்தா அணியில் பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
37 வயதான ஆண்ட்ரே ரஸல், 86 டி20-களிலும் (1122 ரன்கள்), 56 ஒருநாள் போட்டிகளிலும் (1034 ரன்கள்), ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார். மேலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 2012, 2016-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் ரஸலும் இடம் பெற்றிருந்தார்.
ஐபிஎல்லில் இதுவரை 140 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரஸல், கேகேஆர் அணிக்காக மட்டும் 133 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, மொத்தமாக 2651 ரன்கள் எடுத்திருக்கிறார்.
மிட்செல் ஸ்டார்க்
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், செப்டம்பர் 2 ஆம் தேதி சர்வதேச டி20-களில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில் ரூ. 24 கோடிக்கு கொல்கத்தா அணியால் எடுக்கப்பட்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
35 வயதான மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 65 போட்டிகளில் விளையாடி, 79 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர், 2021 யுஏஇ-யில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்லுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
மார்ட்டின் கப்தில்
நியூசிலாந்து அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான மார்டின் கப்தில், ஜனவரி 8 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 2009-ல் அறிமுகமான கப்தில், நியூசிலாந்து அணிக்காக 198 ஒருநாள், 122 டி20, 47 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார்.
அதில், 3531 ரன்களுடன் நியூசிலாந்து அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும், 7346 ஒருநாள் ரன்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளார். அதில், 23 சதங்களையும் விளாசியுள்ளார். 2015 உலகக் கோப்பையின் காலிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 237* ரன்கள் எடுத்து நியூசிலாந்தின் ஒரே ஆண்கள் ஒருநாள் இரட்டைச் சதத்தை அடித்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.
க்ளென் மேக்ஸ்வெல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், ஜூன் 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
2012 முதல் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் அவர் 149 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,990 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 77 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 2023 ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டைச்சதம் விளாசி சாதனையும் படைத்திருந்தார்.
விருத்திமான் சாஹா
இந்திய அணியின் குறிப்பிடத்தக்க விக்கெட் கீப்பர்களில் ஒருவரான 41 வயதான விருத்திமான் சாஹா, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி அனைத்துவித போட்டிகளில் ஓய்வை அறிவித்தார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட்டுகளில் 1,353 ரன்கள் சேர்த்துள்ள சாஹா, 9 ஒருநாள் ஆட்டங்களில் 41 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் ஃபார்மட்டில் 3 சதங்களும், 6 அரைசதங்களும் விளாசியிருக்கும் சாஹா, கீப்பராக 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அதில், 92 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.
இதுதவிர, ரஞ்சி கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவர், முதல்தர கிரிக்கெட்டில் 7,013 ரன்களைக் குவித்து அதில் 14 சதங்கள், 43 அரைசதங்களும் விளாசியிருக்கிறார்.
ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணிக்குப் பெஞ்சுவர் போல கருதப்பட்ட சதேஷ்வர் புஜாரா, ஆகஸ்ட் 24 ஆம் தேதி அனைத்துவித கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார். தடுப்பாட்டத்துக்குப் பெயர் பெற்ற இவர், 2010 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 103 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2021-2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடைசியாக விளையாடியிருந்தார் புஜாரா. டெஸ்ட் கிரிக்கெட்டில் 19 சதங்களுடன் 7195 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 35 அரைசதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 51 ரன்கள் எடுத்துள்ளார்.
ஹெண்ட்ரிச் கிளாசன்
தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் ஹெண்ட்ரிச் கிளாசன், ஜூன் 2 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். 2024 ஜனவரியில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்த இவர், ஐபிஎல்லில் மட்டும் விளையாடி வருகிறார்.
இவர் 60 ஒருநாள், 58 டி20, 4 டெஸ்ட்களில் முறையே 2141 ரன்கள், 1000 ரன்கள், 104 ரன்கள் குவித்துள்ளார். மொத்தமாக 4 சதங்களும், 16 அரைசதங்களும் விளாசியுள்ளார்.
மார்க்ஸ் ஸ்டாய்னிஸ்
ஆஸ்திரேலிய அணியின் ‘ஹல்க்’ என புகழப்படும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் பிப்ரவரி 6 ஆம் தேதி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்தார்.
இதுவரை 71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டாய்னிஸ் 1,495 ரன்கள் 48 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 35 வயதாகும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி புகழ்பெற்றவர். டி20-களில் கவனம் செலுத்த முடிவெடுத்து ஓய்வை அறிவித்தார்.
கிறிஸ் வோக்ஸ்
இங்கிலாந்து அணியின் பிரபல ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் செப்டம்பர் 29 ஆம் தேதி அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
36 வயதான கிறிஸ் வோக்ஸ், 62 டெஸ்ட்களில் விளையாடி 2034 ரன்களையும், 192 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 122 ஒருநாள், 33 டி20 போட்டிகளில் விளையாடி அவர் 204 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1524 ரன்களும், டி20 போட்டிகளில் 147 ரன்களும் எடுத்துள்ளார்.
ஆண்டர்சன் - டெண்டுகல்கர் டிராபி தொடரில் ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது, இடது கையில் கட்டுடன் களத்துக்கு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார் கிறிஸ் வோக்ஸ். அந்தத் தொடரின் கடைசி டெஸ்ட் மட்டுமல்ல; அவருக்கும்!
மொஹித் சர்மா
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா, டிசம்பர் 3 ஆம் தேதி அனைத்துவித போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
2015 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பையில் விக்கெட் வீழ்த்தியவர்களில் முன்னணியில் விளங்கிய மொஹித் சர்மா, கடைசியாக அதே ஆண்டு அக்டோபருக்குப் பின் இந்திய அணியில் தேர்வாகவில்லை. இவர், 26 ஓடிஐ-களில் 31 விக்கெட்டுகளும், 8 டி20-களில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
கிருஷ்ணப்பா கௌதம்
இந்திய அணியின் முன்னாள் வீரரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கௌதம், டிசம்பர் 23 ஆம் தேதி அனைத்து வகையான போட்டி கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
37 வயதான அவர், இந்திய அணிக்காக 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரேயொரு ஒருநாள் போட்டியில் விளையாடி ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் அன்கேப்டு வீரராக இருந்த கிருஷ்ணப்பா கௌதமை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், ஒரு போட்டியில்கூட விளையாட வாய்ப்பளிக்கவில்லை.
சென்னை தவிர மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், லக்னௌ உள்ளிட்ட அணிகளுக்காக 36 போட்டிகளில் 247 ரன்களும், 21 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 59 முதல்தரப் போட்டிகளில் 224 விக்கெட்டுகளையும், 1419 ரன்களையும் குவித்துள்ளார்.
பியூஷ் சாவ்லா
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா, ஜூன் 6 ஆம் தேதி அனைத்துவித போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இவர் இந்திய அணிக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள், 7 டி20-களில் விளையாடியுள்ளார். மேலும், 2007 டி20, 2011 ஒருநாள் உலகக் கோப்பை அணியிலும் அங்கம் வகித்தார்.
வருண் ஆரோன்
ஜார்க்கண்ட் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் ஜனவரி 10 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 35 வயதான அவர் 2011, 2015 க்கு இடையில் இந்தியாவுக்காக 9 ஒருநாள், 9 டெஸ்ட்களில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆரோன் 66 முதல் தர போட்டிகளிலும், 88 லிஸ்ட்-ஏ போட்டிகளிலும், 95 டி20 போட்டிகளிலும் விளையாடி 400 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2011 - 2022 வரை ஐபிஎல்லில் 9 சீசன்களில் தில்லி, பஞ்சாப், கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்காக விளையாடினார்.
ரிஷி தவான்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரிஷி தவான், டி20, ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக ஜனவரி 5 ஆம் தேதி அறிவித்தார். 34 வயதான ரிஷி தவான், 2016 ஆம் ஆண்டில் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடியுள்ளார்.
ஐபிஎல்லில் மும்பை, பஞ்சாப் அணிக்காக விளையாடிய ரிஷி தவான், 2013 முதல் 2024 வரையில் 39 போட்டிகளில் விளையாடியிருந்தார். 2013 ஆம் ஆண்டு கோப்பையை வென்ற மும்பைக்காக 25 விக்கெட்டுகளையும், 210 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார்.
தமிம் இக்பால்
ஒரு காலத்தில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட வங்கதேச அணியின் மிகவும் குறிப்பிடத்தக்க வீரர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் தமிம் இக்பால், ஜனவரி 10 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.
இவர் 70 டெஸ்ட், 243 ஒருநாள், 78 டி20-களில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டில் அறிமுகமான தமிம் இக்பால், சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 15,249 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வங்கதேச வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
நிக்கோலஸ் பூரன்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பரும் அதிரடி பேட்டருமான நிக்கோலஸ் பூரன், ஜூன் 10 ஆம் தேதி தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
2016 ஆம் ஆண்டு முதல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடி வரும் பூரன், 61 ஒருநாள் போட்டிகளில் 1,983 ரன்களும் 106 டி20-களில் 2,275 ரன்களும் குவித்துள்ளார்.
ஏஞ்சலோ மேத்யூஸ்
இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ், ஜூன் 23 ஆம் தேதி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஏஞ்சலோ மேத்யூஸ் இதுவரை இலங்கை அணிக்காக 118 டெஸ்ட்களில் விளையாடி, 8167 ரன்கள் குவித்துள்ளார். இலங்கை அணிக்காக டெஸ்ட்களில் அவர் 16 சதங்கள், 45 அரைசதங்கள் எடுத்துள்ளார். 34 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
பீட்டர் மூர்
ஜிம்பாப்வே அணியின் பீட்டர் மூர், ஜூலையில் அனைத்துவித போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். இரண்டு நாடுகளுக்காக விளையாடிய 17 வீரர்களில் இவரும் ஒருவர். ஜிம்பாப்வே அணிக்காக 49 ஒருநாள், 21 டி20, 8 டெஸ்ட் மற்றும் அயர்லாந்து அணிக்காக 7 என மொத்தம் 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ளார்.
திமுத் கருணாரத்னே
இலங்கை அணிக்காக 100 டெஸ்ட்களில் விளையாடி 7,222 ரன்கள் குவித்துள்ள 36 வயதாகும் திமுத் கருணாரத்னே, அதில் 16 சதங்கள், 39 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.
பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கருணாரத்னே.
முஷ்ஃபிகுர் ரஹிம்
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் மார்ச் 6 ஆம் தேதி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். ஏற்கெனவே டி20-களில் இருந்து ஓய்வுபெற்ற ரஹிம், தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடவுள்ளார்.
விக்கெட் கீப்பரும் பேட்டருமான 37 வயதான முஷ்ஃபிகுர் ரஹிம், 274 சர்வதேச போட்டிகளில் விளையாடி 7,795 ரன்கள் குவித்துள்ளார். இதில், 9 சதங்கள், 49 அரைசதங்கள் அடங்கும்.
மஹ்மதுல்லா
சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் போட்டிகளில் இருந்து வங்கதேச அணி வெளியேறியதும் மார்ச் 13-ல் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் மஹ்மதுல்லா.
39 வயதான மஹ்மதுல்லா தனது 17 வருட கிரிக்கெட் பயணத்தில், 50 டெஸ்ட்(2914 ரன்கள்), 239 ஒருநாள்(5689 ரன்கள்), 141 டி20 (2444) போட்டிகள் என மொத்தமாக 430 போட்டிகளில் விளையாடி 11,047 ரன்கள், 166 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2007 இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய மஹ்மதுல்லா 2011 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடனான போட்டியில் கவனம் பெற்றார். ஒருநாள் உலகக் கோப்பையில் 3 சதமடித்த ஒரே வங்கதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
மஹ்மதுல்லா 6 டெஸ்ட், 43 டி20-களில் தலைமை வகித்து அதில் முறையே ஒரு டெஸ்ட், 16 டி20-ல் அவரின் வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆசிஃப் அலி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஃபினிஷருமான ஆசிஃப் அலி, செப்டம்பர் 2 ஆம் தேதி அனைத்துவித போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக திடீரென அறிவித்தார். 33 வயதேயான ஆசிஃப் அலி, பாகிஸ்தான் அணிக்காக 58 டி20 போட்டிகளிலும், 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் சர்வதேச டெஸ்ட்களில் விளையாடியது கிடையாது.
உஸ்மான் ஷின்வாரி
31 வயதான பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி, செப்டம்பர் 9 ஆம் தேதி அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இவர், ஒரு டெஸ்ட், 17 ஒருநாள், 16 டி20-களில் விளையாடியுள்ளார்.
ஷபூர் ஜத்ரான்
ஆப்கானிஸ்தானின் உயரமான இடக்கை வேகப்பந்து வீச்சாளரான ஷபூர் ஜத்ரான், ஜனவரி 31 ஆம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார். 2015 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் வெற்றியைப் பெறுவதற்கு பெரிதும் பங்களித்தார். 44 ஒருநாள், 36 டி20-களில் விளையாடியுள்ள ஜத்ரான் 80 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பிரியாவிடை!
90ஸ் கிட்ஸ்கள் முதல் இயர்லி 2கே கிட்ஸ்கள் வரை பலரையும் மகிழ்வித்து கிரிக்கெட்டால் கட்டிப் போட்ட பல வீரர்கள், லீக் போட்டிகளின் எழுச்சி, பணிச்சுமை, வருங்கால வீரர்களுக்கு வழிவிடும் விதமாகவும் பலர் தங்கள் ஓய்வு முடிவை எடுத்துள்ளனர்.
கிரிக்கெட் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், ஒவ்வொரு வீரரின் ஓய்வும் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கான புத்துயிர்ப்பாக தேவைப்படுகிறது. ‘பிரிய’ மனமின்றி தற்காலிகமாக பிரியாவிடை பெற்று அவர்கள் களத்தை விட்டு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்; ஆனால், உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்காக அவர்கள் விட்டுச் செல்வது நீங்கா நினைவுகள் மட்டுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.