இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று(டிச.26) கௌரவித்தார்.
கலை மற்றும் கலாசாரம், வீரம், புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக சேவைகள், விளையாட்டு, சுற்றுப்புறச் சூழல் ஆகிய ஏழு பிரிவுகளில் சாதனை புரிந்த 5 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு ஆண்டுதோறும் வீர பால திவஸ் (டிச. 26) நாளில் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
நிகழாண்டுக்கான பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்கார் விருதை பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 20 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஷ்டிரபதி பவனில் உள்ள விக்யான் பவனில் இன்று காலை வழங்கி கௌரவித்தார்.
நிகழாண்டு 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 பேர் இந்த விருதுக்காக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதக்கம், சான்றிதழ், ஆவணத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்திய அணியின் இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார்.
பிகாரைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூரியவன்ஷி கடந்தாண்டு நடந்த மெகா ஏலத்தில் ராஜஸ்தான் ராயல் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தனது அதிரடி பேட்டிங்கால் வியக்கவைத்த சூரியவன்ஷி, 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக்கோப்பை, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர், இளம்வீரர்களுக்கான ஒருநாள், இளம்வீரர்களுக்கான டெஸ்ட், இந்தியா ஏ என அனைத்துப் போட்டிகளிலும் சதம் விளாசி அசத்தி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரிலும் 84 பந்துகளில் 190 ரன்கள் விளாசி வியக்கவைத்தார்.
பால புரஸ்கார் விருது பெற்ற வைபவ் சூரியவன்ஷி, பிரதமர் மோடியையும் சந்திக்கவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.