சர்வதேச டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனையை பூடான் வீரர் சோனம் யெஷே படைத்துள்ளார்.
மியான்மருக்கு எதிராக பூடானில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி பூடான் அணி சர்வதேச டி20 போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பூடான் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது.
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மியான்மர் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பூடான் தரப்பில் 22 வயதாகும் இளம் சுழற்பந்துவீச்சாளரான சோனம் யெஷே அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
சர்வதேசப் போட்டிகளிலோ அல்லது டி20 லீக் போட்டிகளிலோ இதுவரை எந்தவொரு பந்துவீச்சாளரும் ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதில்லை. இந்த நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற உலக சாதனையை சோனம் யெஷே படைத்துள்ளார்.
உலக சாதனை படைத்துள்ள சோனம் யெஷே குறித்து பூடான் கிரிக்கெட் அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அபார பந்துவீச்சை சோனம் யெஷே வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்களில் வெறும் 7 ரன்களை விட்டுக் கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அவர் உலக சாதனை படைத்துள்ளது நம்பமுடியாத விதமாக இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு மலேசிய வேகப் பந்துவீச்சாளர் சியாஸ்ருல் இட்ருஸ் சீனாவுக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் 8 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்ததே இதுவரையிலான உலக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.