சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இருவர் அரைசதம்
ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் களமிறங்கினர். ரஹ்மனுல்லா குர்பாஸ் 0 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன் பின், இப்ராஹிம் ஸத்ரான் மற்றும் செதிக்குல்லா அடல் ஜோடி சேர்ந்தனர். கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இப்ராஹிம் ஸத்ரான், 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின், ரஹ்மத் ஷா 12 ரன்கள், ஹஸ்மதுல்லா ஷகிதி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகளை இழந்தபோதிலும், நேர்த்தியாக விளையாடிய செதிக்குல்லா அடல் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 95 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதன் பின், களமிறங்கிய அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார். சிறப்பாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஆட்டமிழந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ரஷித் கான் 19 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஸாம்பா தலா இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.