இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 31) மெல்போர்னில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
170 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம் கடந்தார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹீதர் நைட் 25 ரன்களும், வியாட் ஹாட்ஜ் 22 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிப்போட்டியில் இந்தியா!
ஆஸ்திரேலியா தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிம் கார்த் மற்றும் டார்ஸி பிரௌன் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்டனர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான ஜியார்ஜியா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். ஃபோப் லிட்ச்ஃபீல்டு 20 ரன்களுடனும், அன்னாபெல் சதர்லேண்ட் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையும் படிக்க: சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது!
சதம் விளாசிய அன்னாபெல் சதர்லேண்ட்
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 114 ரன்கள் பின் தங்கிய நிலையில், இன்று (ஜனவரி 31) இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஃபோப் லிட்ச்ஃபீல்டு மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். இருப்பினும், ஃபோப் லிட்ச்ஃபீல்டு 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் அலிஸா ஹீலி 34 ரன்களில் ஆட்டமிழக்க, அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் பெத் மூனி இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது. களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னாபெல் சதர்லேண்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 258 பந்துகளில் 163 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 21 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின், ஆஷ்லே கார்டனர் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பெத் மூனி அரைசதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 422 ரன்கள் எடுத்துள்ளது. பெத் மூனி 98 ரன்களுடனும், தஹிலா மெக்ராத் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 252 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.