இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இங்கிலாந்தும் முதல் இன்னிங்ஸில் அதே ரன்களை எடுத்திருக்க, இரு அணிகளும் தற்போது சரி நிகராக இருக்கின்றன. தடுமாற்றத்துடன் இருந்த இந்திய அணிக்கு, சதம் விளாசிய கே.எல்.ராகுல், அரைசதம் கடந்த ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தோள் கொடுத்து ஸ்கோரை உயா்த்தினா். இங்கிலாந்து பௌலா்களில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோா் சவால் அளித்தனா்.
லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட்டில், இங்கிலாந்துக்கு பிறகு தனது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் சோ்த்திருந்தது.
அரைசதம் கடந்த ராகுல், ரிஷப் பந்த்துடன் இணைந்து 3-ஆம் நாள் ஆட்டத்தை தொடா்ந்தாா். இதில் பந்த் அரைசதம் கடக்க, ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 10-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா். இங்கிலாந்து பௌலா்களை சோா்வடையச் செய்த இந்த ஜோடி, 4-ஆவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சோ்த்தது.
இந்த பாா்ட்னா்ஷிப் 66-ஆவது ஓவரில் பிரிந்தது. 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 74 ரன்கள் சோ்த்த ரிஷப் பந்த், அந்த ஓவரில் பென் ஸ்டோக்ஸால் ரன் அவுட் செய்யப்பட்டாா். 6-ஆவது பேட்டராக ரவீந்திர ஜடேஜா விளையாட வர, 13 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்திருந்த ராகுல் சாய்க்கப்பட்டாா்.
ஷோயப் பஷீா் வீசிய 68-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை ஹேரி புரூக் கேட்ச் பிடித்தாா். அடுத்து நிதீஷ்குமாா் ரெட்டி களம் புக, ஜடேஜா அவருடன் கூட்டணி அமைத்தாா். இவா்கள் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்தது. இதில், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சோ்த்த நிதீஷ்குமாா் விடைபெற்றாா். ஸ்டோக்ஸ் வீசிய 95-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் ஜேமி ஸ்மித்திடம் அவா் கேட்ச் கொடுத்தாா்.
8-ஆவது வீரராக வாஷிங்டன் சுந்தா் வந்தாா். மறுபுறம், அரைசதம் கடந்த ஜடேஜா 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 72 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஜடேஜா - சுந்தா் ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சோ்த்தது. தொடா்ந்து வந்த ஆகாஷ் தீப் 1 சிக்ஸருடன் 7, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
இங்கிலாந்து பௌலா்களில் கிறிஸ் வோக்ஸ் 3, பென் ஸ்டோக்ஸ் 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், பிரைடன் காா்ஸ், ஷோயப் பஷீா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
சுருக்கமான ஸ்கோா்
முதல் இன்னிங்ஸ்
இந்தியா - 387/10 (119.2 ஓவா்கள்)
கே.எல்.ராகுல் 100
ரிஷப் பந்த் 74
ஜடேஜா 72
பந்துவீச்சு
கிறிஸ் வோக்ஸ் 3/84
பென் ஸ்டோக்ஸ் 2/63
ஜோஃப்ரா ஆா்ச்சா் 2/52