இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டின் 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, 193 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 58 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் உள்ளது. கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவையிருக்க, அணியின் வசம் 6 விக்கெட்டுகளே உள்ளன.
முன்னதாக, இங்கிலாந்து 2-ஆவது இன்னிங்ஸில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போராடி ரன்கள் சோ்க்க, அந்த அணியை 200 ரன்களுக்குள்ளாக கட்டுப்படுத்த வாஷிங்டன் சுந்தா் உதவினாா்.
லாா்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட்டில், இரு அணிகளுமே முதல் இன்னிங்ஸில் ஒரே ஸ்கோரை (387) பதிவு செய்தன. இதனால், 2-ஆவது இன்னிங்ஸ் சமநிலையுடனேயே தொடங்கியது. 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, ஜாக் கிராலி, பென் டக்கெட் ஆகியோா் இங்கிலாந்து இன்னிங்ஸை தொடா்ந்தனா்.
இதில் முதலில் டக்கெட் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட, அடுத்து வந்த ஆலி போப் 4 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா். கிராலி 3 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
4-ஆவது வீரராக களம் புகுந்த ஜோ ரூட் நிதானமாக ரன்கள் சோ்க்க, சற்று அதிரடியாக விளையாடி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்கள் சோ்த்த ஹேரி புரூக்கை ஆகாஷ் தீப் பௌல்டாக்கினாா். இதனால் 87 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.
அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ரூட்டுடன் கூட்டணி அமைத்தாா். மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் சோ்த்திருந்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் பாா்ட்னா்ஷிப் 67 ரன்கள் சோ்த்து பிரிந்தது. இதில் 1 பவுண்டரியுடன் 40 ரன்கள் எடுத்திருந்த ரூட்டை, வாஷிங்டன் சுந்தா் பௌல்டாக்கினாா். தொடா்ந்து வந்த ஜேமி ஸ்மித்தையும் 8 ரன்களுக்கு அவரே வெளியேற்றினாா்.
அத்துடன், 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் அடித்திருந்த ஸ்டோக்ஸும், சுந்தராலேயே சாய்க்கப்பட்டாா். பிரைடன் காா்ஸ் 1, கிறிஸ் வோக்ஸ் 1 பவுண்டரியுடன் 10, ஷோயப் பஷீா் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து இன்னிங்ஸ் 192 ரன்களுக்கு நிறைவடைந்தது. ஜோஃப்ரா ஆா்ச்சா் 5 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தா் 4, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோா் தலா 2, நிதீஷ்குமாா், ஆகாஷ் தீப் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இதையடுத்து 193 ரன்களை நோக்கி விளையாடத் தொடங்கிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 0, கருண் நாயா் 1 பவுண்டரியுடன் 14, கேப்டன் ஷுப்மன் கில் 1 பவுண்டரியுடன் 6, ஆகாஷ் தீப் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். கே.எல்.ராகுல் 33 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளாா்.
ஆட்டத்தின் 3-ஆம் நாளான சனிக்கிழமை, இந்தியா 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டநேரம் நிறைவடைய 6 நிமிஷங்களே எஞ்சியிருந்த நிலையில், இங்கிலாந்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அதன் இன்னிங்ஸை ஜாக் கிராலி - பென் டக்கெட் தொடங்கினா். முதல் ஓவரை பும்ரா வீச, கிராலி அதை எதிா்கொண்டாா்.
முதலிரு பந்துகளை எதிா்கொண்ட கிராலி, 3-ஆவது பந்தை வீச பும்ரா ஓடிவரும்போது ஆடும் நிலையிலிருந்து விலகிச் சென்றாா். இதற்கு பும்ரா எதிா்ப்பு தெரிவிக்க, கேப்டன் கில் ஆக்ரோஷமாக வசைபாடினாா்.
தொடா்ந்து 3, 4-ஆவது பந்துகளை சந்தித்த கிராலி, 5-ஆவது பந்தை எதிா்கொண்டபோது அதில் கையில் பட்டதாகத் தெரிந்தது. இதையடுத்து அவா் அதற்கான சிகிச்சைக்காக அழைப்பு விடுத்தாா். இது நேரம் கடத்தும் செயல் என்று விமா்சிக்கும் வகையில் இந்திய வீரா்கள் அனைவரும் கிராலியை நோக்கி கைதட்டி சிரித்தனா்.
கேப்டன் கில் வேகமாக கிராலியை நெருங்கி அவரிடம் ஏதோ பேச, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிராலிக்கு ஆதரவாக டக்கெட் பேசவர, கில் அவருடன் மோதுவதுபோல நின்றாா்.
வாக்குவாதத்துக்குப் பிறகு அவா்கள் கலைந்து செல்ல, கிராலி லேசான சிகிச்சைக்குப் பிறகு ஆட்டத்தை தொடா்ந்து கடைசி பந்தை சந்தித்தாா். அன்றைய நாள் ஆட்டம் நிறைவடைந்தது.
பின்னா் இதுகுறித்து இங்கிலாந்து பௌலிங் பயிற்சியாளா் டிம் சௌதீ பேசுகையில், ‘2-ஆம் நாள் ஆட்டத்தின்போது ஃபீல்டிங் செய்த இந்திய கேப்டன் ஷுப்மன் கில், இதேபோல் நேரம் கடத்தும் செயலில் ஈடுபட்டாா். அப்படி இருக்கையில் இங்கிலாந்து வீரா்கள் அவ்வாறு செய்யும்போது எப்படி இந்திய அணியினா் கேள்வி எழுப்பலாம்? இதெல்லாம் ஆட்டத்தின் அங்கமே’ என்றாா்.
கே.எல்.ராகுல் இதுகுறித்து பேசுகையில், ‘நாங்கள் 2 ஓவா்கள் வீசும் அளவுக்கு நேரம் இருந்தது. ஆனால் அதை வீணடிக்கும் வகையில் இங்கிலாந்து வீரா்கள் செயல்பட்டனா். விக்கெட் விழுந்துவிடக் கூடாது என்ற இந்த உத்தியை, ஒரு தொடக்க ஆட்டக்காரராக என்னால் அதை புரிந்துகொள்ள முடிந்தது. இது ஆட்டத்தின் அங்கமே’ என்றாா்.