தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஃபைசலாபாதில் இன்று (நவம்பர் 8) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 37.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் குயிண்டன் டி காக் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 70 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, லுஹான் டி பிரிடோரியஸ் 39 ரன்கள் எடுத்தும், பிரீட்ஸ்க் மற்றும் பீட்டர் தலா 16 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது நவாஸ், சல்மான் அகா மற்றும் ஷகீன் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சொந்த மண்ணில் முதல் முறை
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 25.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சைம் ஆயுப் 70 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, முகமது ரிஸ்வான் 32 ரன்களும், பாபர் அசாம் 27 ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தான் அணி அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்காவை ஒருநாள் தொடரில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றையப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அப்ரார் அகமது ஆட்ட நாயகனகாவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட குயிண்டன் டி காக் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் குயிண்டன் டி காக் புதிய சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.