மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (நவம்பர் 9) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டேரில் மிட்செல் அதிரடியாக 24 பந்துகளில் 41 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 26 ரன்களும், டிம் ராபின்சன் 23 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர் மற்றும் மேத்யூ ஃபோர்டி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ரோமாரியோ ஷெப்பர்டு, ஷமர் ஸ்பிரிங்கர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடரில் முன்னிலை பெற்ற நியூசிலாந்து
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 19.5 ஓவர்களில் 168 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக ரோமாரியோ ஷெப்பர்டு 49 ரன்களும், ஷமர் ஸ்பிரிங்கர் 39 ரன்களும் எடுத்தனர். அலிக் அதனாஸ் 31 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஈஷ் சோதி மற்றும் ஜேக்கோப் டஃபி தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கைல் ஜேமிசன், மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஈஷ் சோதிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: இம்பாக்ட் வீரர் விருது வென்ற தமிழர்..! பிசிசிஐ கௌரவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.