முதல் தர கிரிக்கெட்டில் 11 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி மேகாலயா வீரர் ஆகாஷ் சௌதரி சாதனை படைத்துள்ளார்.
ரஞ்சி கோப்பை பிளேட் குரூப் போட்டியில் மேகாலயா மற்றும் அருணாசலப் பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் மேகாலயா வீரர் ஆகாஷ் சௌதரி 11 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
மேகாலயா அணிக்காக 8-வது வீரராக களமிறங்கிய ஆகாஷ் சௌதரி, முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. அதன் பின், இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் எடுத்தார். அதன் பின், அவர் சந்தித்த 8 பந்துகளிலும் தொடர்ச்சியாக சிக்ஸர் விளாசி அசத்தினார். இதன் மூலம் 11 பந்துகளில் அவர் அதிவேகமாக அரைசதம் விளாசினார்.
இதற்கு முன்பாக, முதல் தர போட்டிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு லெய்ஸெஸ்டர்ஷைர் வீரர் வயன் வொயிட் 12 பந்துகளில் அரைசதம் விளாசியதே அதிவேக அரைசதமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ஆகாஷ் சௌதரி முறியடித்துள்ளார். மேலும், சர் கர்ஃபீல்டு சாபர்ஸ் மற்றும் ரவி சாஸ்திரிக்கு அடுத்தபடியாக முதல் தர போட்டிகளில் ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் விளாசிய மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் ஆகாஷ் சௌதரி படைத்தார்.
சர் கர்ஃபீல்டு சாபர்ஸ் கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் முறையாக முதல் தர போட்டிகளில் ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்தார். அதன் பின், கடந்த 1984-85 ஆம் ஆண்டுகளில் வான்கடே திடலில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியின்போது, ரவி சாஸ்திரி ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டார். தற்போது, இந்த சாதனைப் பட்டியலில் மேகாலயா வீரர் ஆகாஷ் சௌதரியும் இணைந்துள்ளார்.
மேகாலயா அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 628 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. ஆகாஷ் சௌதரி 14 பந்துகளில் 50 ரன்களுடன் களத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்திய அணியின் அடுத்த இலக்கு இதுதான்: ரேணுகா சிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.