ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்தான் மிகவும் முக்கியமான வீரர் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்காக இரண்டு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதல் போட்டியில் விளையாடமாட்டார். அவருக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளார்.
பல ஆண்டுகளாக ஆஷஸ் தொடரை வெல்லாமலிருக்கும் இங்கிலாந்து அணிக்கு இந்த ஆஷஸ் தொடர் மிகவும் முக்கியமான தொடராகும். இந்த முறை ஆஷஸ் தொடரை கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்தான் மிகவும் முக்கியமான வீரர் என பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஈடுபடும்போது, ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவர் மிகவும் முக்கிமான வீரராக கண்டிப்பாக இருப்பார். இந்த தொடரின் ஐந்து போட்டிகளிலும் முழுமையாக விளையாடுவதற்கான உடல் தகுதியுடன் அவர் இருப்பார் என நம்புகிறேன். இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவார். ஏனெனில், அவரது பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியம்.
கடந்த சில நாள்களாக பென் ஸ்டோக்ஸ் பயிற்சியில் ஈடுபடுவதைப் பார்த்தேன். அவர் மிகவும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இரண்டு ஸ்பெல் பந்துவீச்சு, இரண்டு மணி நேரம் பேட்டிங் என கடுமையாக உழைக்கிறார். அவரைப் போன்று கடுமையாகப் பயிற்சியில் ஈடுபடும் ஒருவரை இதற்கு முன் நான் பார்த்ததில்லை என்றார்.
கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாட்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தொடரை வென்றதில்லை. அதேபோல, கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற ஆஷஸ் தொடர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான தொடர் ஒருபோதும் எளிதாக இருக்காது; தென்னாப்பிரிக்காவை எச்சரிக்கும் கங்குலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.