இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு ஆக்ராவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிரணிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிசிசிஐ-ன் பரிசுத் தொகை மட்டுமின்றி, வீராங்கனைகளுக்கு அந்தந்த மாநில அரசு சார்பிலும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உலகக் கோப்பையை வென்று சொந்த ஊருக்குத் திரும்பிய இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மாவுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இறுதிப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். முதல் முறையாக இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தீப்தி சர்மாவின் பங்களிப்பு இன்றியமைததாக இருந்தது.
உலகக் கோப்பையை வென்று தனது சொந்த ஊரான ஆக்ராவுக்குத் திரும்பிய தீப்தி சர்மாவுக்கு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாபெரும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆக்ராவின் சாலைகளின் இருபுறங்களிலும் மக்கள் நின்று, வாகனத்தில் சாலைவலம் வந்த தீப்தி சர்மாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். சுமார் 10 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சாலைவலம் தொடர்ந்தது.
பள்ளிக் குழந்தைகள், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தீப்தி சர்மாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். பலரும் தங்களது கைகளில் தேசியக் கொடியை வைத்து அசைத்தவாறு இருந்தனர். இந்த சாலைவலத்தின்போது, தீப்தி சர்மா மீது மலர் தூவி மக்கள் அவரை வரவேற்றனர்.
சொந்த ஊர் திரும்பிய தீப்தி சர்மாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரில் ஏற்படுவதைத் தடுக்கவும், போக்குவரத்தை சரிசெய்யவும் 150-க்கும் அதிகமான காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.